டாஸ்மாக் கடைகளில் காலையிலேயே கூட்டம்.. மது அடிமை மாநிலமா தமிழகம்? மீட்க வழியிருக்கு.. செய்யுமா அரசு?
சென்னை: ஊரடங்கு முடிந்து டாஸ்மாக்கை திறந்தாலும் திறந்தார்கள், காலை 6 மணிக்கெல்லாம் மதுவிற்கு அடிமையானவர்கள், டாஸ்மாக் வாசலில் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
வெகு நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் கறிக்கடைகளில் எப்படி அலைமோதியதோ அதேபோல கூட்டம் வெட்கமில்லாமல் டாஸ்மாக் முன்பாக நின்று கொண்டு இருக்கிறது.
அரசுக்கு வருவாய் வர வேண்டும் அதனால் திறக்கிறோம் என்று சிலரும், திடீரென கடையை மூடுவதால், குடி அடிமைகள், உடலுக்கு தீங்கு வந்து விடும் என்று சிலரும், டாஸ்மாக் இல்லாவிட்டால், கள்ளச் சாராயம் காய்ச்சி குடித்து விடுவார்கள் என்று சிலரும் இதற்கு நியாயம் கற்பிக்க கருத்து கூறி வருவதை பார்க்க முடிகிறது.

டாஸ்மாக் திறந்ததும் கொடுமை
ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? ஊரடங்கில் டாஸ்மாக் மூடப்பட்டிருந்தபோது, ரேஷன் கடைகளில் கொடுத்த அரிசியை சாப்பிட்டு கூட நிம்மதியாக இருந்தோம், ஆனால், டாஸ்மாக் திறந்த பிறகு, வீட்டில் கணவர் அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறார், கையில், காதில் போட்டிருந்த நகைகளை கூட விற்று பாட்டில் வாங்குகிறார் என்று மது அடிமைகள் மறு வாழ்வு மையங்கள் பலவற்றுக்கும் வரிசை கட்டி தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. "ஒன்இந்தியா தமிழ்" தனது கள ஆய்வில் இதை உறுதி செய்துள்ளது.

கொரோனாவை பரப்பும் குடிகாரர்கள் கூட்டம்
இத்தனை நாள் கிடைக்காதது கிடைத்த சந்தோஷத்தில் முன்பை விடவும் அதிகமாக ஒரே நாளில் குடித்து மெய்மறக்கும் நிலைக்கு போயுள்ளனர் பல குடிகாரர்கள். இவர்களால் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் மட்டும் பாதிப்பு கிடையாது. கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் முன்பாக போய் நிற்பதோடு, ஒழுங்கீனமாக சமூக இடைவெளி இல்லாமல் பழகுவதால், கொரோனா நோய் பரவலையும் அதிகரித்துள்ளனர் குடிகாரர்கள். ஓகே.. இதெல்லாம் தெரிந்த விஷயம். இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான, குடியை நிறுத்த என்ன செய்யலாம்?

கடையை திறந்ததும் அட்டகாசம்
திருப்பூர், பல்லடம் ரோடு பகுதியுள்ள, "கேர் ரிகேபிலிடேஷன் சென்டர்" மையத்தின் நிர்வாகி பிரியா, மதுவிற்கு அடிமையானவர்களை எப்படி மீட்டெடுப்பது என்பது தொடர்பாக, தனது அனுபவங்களை, நம்மோடு பகிர்ந்து கொண்டார். டாஸ்மாக் திறந்த பிறகு நிலைமை எப்படி இருக்கிறது என்பதைத்தான் முதல் கேள்வியாக முன் வைத்தோம். "நிலைமை மோசமாகிவிட்டது" என்று பேச்சை ஆரம்பித்த பிரியா, மேலும் கூறுகையில், கடந்த முறை லாக்டவுன் நேரத்திலும் சரி, இந்த வருடம் லாக்டவுன் காலத்திலும் சரி.. மது போதையால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தோ, அவர்கள் குடும்பத்திடமிருந்தோ, உதவி கேட்டு எங்களுக்கு அழைப்பே வரவில்லை. ஆனால் மதுக் கடைகளை திறந்த அடுத்த 1 மணி நேரத்தில், "என் கணவர் ரோட்டில் விழுந்து கிடக்கிறார், தூக்கிட்டு போங்க சிஸ்டர்.." என்று பல பெண்கள் போன் போட்டு புலம்பும் நிலை உருவாகிவிட்டது என்றார் ஆதங்கத்தோடு.

மதுக் கடைகளை மூடுவதுதான் ஒரே வழி
டாஸ்மாக் மூடப்பட்டால், குடி அடிமைகள் உடல்நிலை, மனநிலை பாதிக்கப்படுமா.. இதைச் சொல்லிதானே மதுபான கடைகளை திறப்பதை ஆதரிப்பவர்கள் பேசி வருகிறார்கள் என்று கூறினால், "அப்படியெல்லாம் கிடையாது. லட்சத்தில் ஒருவருக்கு வேண்டுமானால் சில அறிகுறிகள் ஏற்படும். தூக்கம் வராது, புலம்புவார்கள்.. இதற்கெல்லாம் மருந்து இருக்கிறது. சரி செய்து விடலாம். நாங்கள் எங்களது மையத்தில் அதை செய்கிறோம். இதற்காக பல தரப்பட்ட மருத்துவர்கள் மையத்தில் உள்ளனர். குடி போதைக்கு அடிமையானவர்கள் எல்லோருமே குடியை நிறுத்துவதால் பாதிக்கப்படுவது கிடையாது. எனவே மதுபானத்திற்கு மக்கள் அடிமையாவதை தடுக்க வேண்டும் என்றால், மதுக் கடைகள் இருக்க கூடாது. இதுதான் ஒரே வழி." என்றார் அழுத்தம் திருத்தமாக.

குடிகாரர்களை திருத்த ஒரே வழி
மதுக் கடைகள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும், மது குடிக்க கூடாது என விரும்புவோரை, கவுன்சிலிங் அல்லது மருத்துவம் கொடுத்து, முழுமையாக மீட்டு விடலாம்தானே என்று கேட்டபோது, அதை மறுக்கிறார் பிரியா. "குடிப் பழக்கம் என்பது சர்க்கரை நோய் போல. ஒருமுறை வந்தால் போகாது. குறைக்க மட்டும்தான் முடியும். 10 வருடம் குடிக்காமல் இருப்பவர் கூட திரும்ப மது நாவில் பட்டு விட்டால் குடிபோதைக்கு அடிமையாகிவிடுவார். இது எங்கள் அனுபவத்தில் பார்த்து வருகிறோம். ஆனால், கவுன்சலிங் மற்றும் மருத்துவ சப்போர்ட் மூலம், குடி வீரியத்தை குறைக்கலாம், உடல் நலனை மேம்படுத்தலாம். முழு நேரமும் அதே வேலையாக இருப்பவர்களை மாற்றலாம். ஆனால் மதுபான கடைகள் இல்லாமல் போனால், மொத்தமாக வேறு வழியின்றி குடிப்பதை விட்டு விடுவார்கள்" என்கிறார் அவர்.

திருத்த வழி உள்ளது
"திருப்பூர் போன்ற நகரங்களில் வார சம்பள நடைமுறை இருக்கிறது, அதுபோக அட்வான்ஸ் வாங்கிக் கொள்கிறார்கள், அந்த பணத்தை வைத்து நிறைய குடிக்கிறார்கள். எனவேதான் தமிழ்நாட்டில் திருப்பூர் பகுதியில் அதிக மது விற்பனை நடைபெறுகிறது. வட மாநில தொழிலாளர்களை விட நம்மவர்கள்தான் அதிகம் குடித்து ரோட்டில் விழுந்து கிடப்பதை திருப்பூரில் பார்க்க முடியும். மதுக் கடைகளை மூடினால் மது குடித்தோருக்கு உடம்பு கெடும், அல்லது கள்ளச்சாராயம் காய்ச்சிவிடுவார்கள், அல்லது சானிடைசர் போன்ற பொருட்களை போதைக்காக குடிப்பார்கள் என்பதெல்லாம், எங்கோ ஓரிரு இடங்களில் நடக்க கூடியது. அவர்களை திருத்தலாம், வழி இருக்கிறது. ஆனால், மதுக் கடைகளால் பல மடங்கு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் யதார்த்தம்" என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பிரியா.
Recommended Video

மது அடிமை மாநிலமாக கூடாது தமிழ்நாடு
நாம் பேசிய மேலும் பல மது அடிமைகள் மீட்பு சார்ந்த வல்லுநர்களும், ஏறத்தாழ இதே கருத்தைத்தான் முன் வைக்கிறார்கள். ஆக.. டாஸ்மாக் உட்பட மதுபான கடைகள் எந்த வழியில் வந்தாலும் இழுத்து மூடுவதுதான் மது அடிமைகளின் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடாமல் தடுக்க இருக்கும் ஒரே வழி என்பதுதான், இந்த விவகாரங்கள் சார்ந்தவர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications