வந்தாச்சு வந்தே பாரத் ஸ்லீப்பர் வெர்ஷன்! அடடே இவ்வளவு சீக்கிரமாவா.. வேற லெவலில் மாறும் ரயில் பயணம்
சென்னை: அடுத்த கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் வெர்ஷனை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது அனைவருக்கும் தெரியும். இது தொடர்பாக இப்போது கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் பல ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில்களைத் தொடங்கி வைக்கும் நிலையில், ஒவ்வொரு ரூட்டிலும் வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. முற்றிலும் ஏசி வசதி, தானியங்கி கதவுகள், பயோ டாய்லெட், சூழலும் நாற்காலி என இதில் வசதிகள் கொட்டி கிடக்கிறது.
இந்தியாவில் பல்வேறு ரூட்களில் வந்தே பாரத் இப்போது இயங்கி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை- பெங்களூர்- மைசூர் மற்றும் சென்னை- கோவை இடையே வந்தே பாரத் இயங்கி வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த கட்டமாகச் சென்னை- நெல்லை மற்றும் சென்னை விஜயவாடா இடையேயும் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர்: இதற்கிடையே வந்தே பாரத் அடுத்தகட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் வெர்ஷன் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் பெரம்பூரில் ஐசிஎஃப் தொழிற்சாலையில் படுவேகமாக நடந்து வருகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் வெர்ஷன் ரயில் பணிகள் சிறப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி-மார்ச் மாத்தில் இவை பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது. இதன் இறுதி வெர்ஷன் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியன் ரயில்வே மொத்தம் 77 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது அமர்ந்து கொண்டே செல்லும் வந்தே பாரத் ரயில்கள் மட்டும் உற்பத்தி செய்யும் நிலையில், அத்துடன் இந்த ஸ்லீப்பர் வெர்ஷன் வந்தே பாரத் ரயில்கள் என மொத்தம் 77 வந்தே பாரத் ரயில்களை இந்த நிதியாண்டிற்குள் உற்பத்தி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஏன் முக்கியம்: இப்போது அமர்ந்து கொண்டே செல்லும் வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இருக்கிறது. இதன் ரூட்கள் காலையில் எந்தவொரு இடத்தில் இருந்து கிளம்புகிறதோ.. அதே இடத்திற்கு மாலை திரும்பும்படியே தேர்வு செய்யப்படுகிறது. இதனால் அதிகபட்சமாக 550 கிமீ மேல் வந்தே பாரத் ரயில்களால் செல்ல முடியாது. இதன் காரணமாகவே இப்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் நீண்ட தூரத்திற்கு வந்தே பாரத் ரயில்களை இயக்க முடியும்.
அதேநேரம் மறுபுறம் அருகே இருக்கும் நகரங்களை இணைக்க வந்தே மெட்ரோவையும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன. இது இப்போது சென்னையில் இருக்கும் மெட்ரோவில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். சென்னை மெட்ரோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், இவை முற்றிலுமாக சென்னையில் தயாரிக்கப்படுகிறது.
என்ன வித்தியாசம்: சென்னை மெட்ரோ ஸ்டான்டர்ட் கேட்ஜ் (standard gauge) வந்தே மெட்ரோ அகலப்பாதையில் (broad gauge) இயங்கும். எனவே உள்ளே இடவசதி அதிகமாக இருக்கும். வந்தே மெட்ரோவை கொண்டு 100 கிமீ அருகே இருக்கும் ஊர்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதிலும் வந்தே பாரத்தில் இருப்பது போல ஏசி கோச்கள், சீட்கள், டாய்லெட்கள் என அனைத்தும் இருக்கும். குறுகிய தூரம் என்பதால் இதில் உணவு மட்டும் எதுவும் வழங்கப்பட்டது எனத் தெரிகிறது. இந்த வந்தே மெட்ரோ பயன்பாட்டிற்கு வந்தால், அண்டை ஊர்களில் உள்ளவர்கள் வசதியாகவும் மிக வேகமாகவும் சென்னைக்கு வந்து செல்ல முடியும்.












Click it and Unblock the Notifications