Beela Venkatesan Demise: கொரோனா சமயத்தில் இவரது புடவை பெண்களிடையே பேமஸ்.. யார் இந்த பீலா வெங்கடேசன்?
சென்னை: தமிழ்நாடு எரிசக்தித் துறைச் செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார். கொரோனா காலத்தில் இவரது பிரஸ் மீட்டை பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதன் பிறகும் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த இவர், சமீபத்தில் தான் தனது பெயரைக் கூட பீலா ராஜேஷ் என்பதில் இருந்து பீலா வெங்கடேசன் என மாற்றியிருந்தார்.
கடந்த 2019ல் கொரோனா பெருந்தொற்று நம்மை தாக்கியது. முதலில் என்ன நடக்கிறது என்று ஒரு தெளிவே இல்லாமல்.. திரும்பிய பக்கமெல்லாம் அச்சமும் குழப்பமும் தான் இருந்தது. கொரோனா பரவல், தனிமைப்படுத்துதல், மரணம் என நம்மை ஒரு வழி செய்துவிட்டது. அப்போது கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

பீலா வெங்கடேசன்
அந்தக் காலக்கட்டத்தில் சுகாதாரத் துறை செயலளாராக இருந்த பீலா வெங்கடேசன் பணி பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றது. கொரோனா பரவ ஆரம்பித்தது முதலே ஒவ்வொரு நாளும் செய்தியாளர்களைச் சந்தித்த பீலா வெங்கடேசன், மாநிலத்தில் கொரோனா பரவல் குறித்த நிலையை விரிவாக விளக்கி வந்தார். தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாகத் தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.
அப்போது கொரோனாவால் மக்கள் முழுக்க முழுக்க பீதியிலும் குழப்பத்திலும் இருந்த நிலையில், பீலா வெங்கடேசன் தெளிவான விளக்கங்களைக் கொடுத்தார். இது மக்களுக்கு அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் இருந்தாலும் அதையும் தாண்டி தினசரி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்த பீலா வெங்கடேசனின் செயல் அந்தக் காலக்கட்டத்தில் பெரிதாகப் பாராட்டப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலரும் அவரை பாராட்டி இருந்தனர்.
புடவைகள் பேமஸ்
அப்போது பீலா வெங்கடேசன் பிரஸை சந்திக்க வரும்போது அவர் என்ன தகவலைச் சொல்வார் என்பதே மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெரும்பாலான மக்கள் அவர் சொல்லும் தகவலைக் கவனித்தாலும், சில பெண்களோ பீலா வெங்கடேசன் கட்டி வந்த சேலையைப் பார்த்து, சிலாகித்தனர். அவரது சேலை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருப்பதாக அப்போதே பெண்கள் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து தள்ளி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
2020 ஜூன் மாதம் வரையிலும் பீலா வெங்கடேசன் தான் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு 40,000ஐ கடந்த சூழலில், அதன் பிறகே பீலா வெங்கடேசன் சுகாதார துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், பீலா வெங்கடேசனுக்கு அப்போது வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் பிறகும் அவர் பல முக்கிய பதவிகளை வகித்து வந்தார்.
பெயர் மாற்றம்
இவர் ஒடிசாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் என்பவரை 1992ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் பெயர் பீலா ராஜேஷ் என்று மாறியது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் தாஸ் சில சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், அவரை விட்டுப் பிரிந்து வாழ ஆரம்பித்தார் பீலா. அவரது பெயரையும் பீலா ராஜேஷ் என்பதில் இருந்து பீலா வெங்கடேசன் என மாற்றிக்கொண்டார். மேலும், ராஜேஸ் தாஸிடம் இருந்து விவாகரத்து பெறும் வழக்கு தொடர்ந்தார்.
காலமானார்
தனிப்பட்ட வாழ்க்கை இப்படி இருந்தாலும் பல முக்கிய பதவிகளை இவர் சிறப்பாகக் கையாண்டு வந்தார். கடந்த 2022 நவம்பரில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பீலா வெங்கடேசன், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்தச் சூழலில் தான் அவருக்குக் கடந்த சில மாதங்களாகவே மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துள்ளார். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications