நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 18-வது லோக்சபா தேர்தலில் முதல் கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதை விட தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுகவின் தலைமைகளுக்கான கடுமையான அக்னி பரீட்சையாகவே இந்த தேர்தல் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படையாகவே, மறைமுகமாகவோ அரசியல் அரங்கத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. 1990களுக்குப் பிந்தைய தேர்தல்களை எடுத்துப் பார்த்தாலே இந்த அதிர்வுகளைப் புரிந்துக்கொள்ள முடியும்.

Why 2024 Lok Sabha Election Big Challenge for DMK MK Stalin AIADMK Edappadi Palaniswami

புதிது புதிதாக உருவெடுக்கும் அரசியல் கட்சிகள், அதிகபட்சமாக இரண்டு தேர்தல்களுக்கு பின்னர் இருக்கிற இடம் தெரியாமல் போவது அல்லது ஏதேனும் ஒரு கூட்டணியில் அசைக்க முடியாத அங்கமாகி சங்கமமாகி விடுவது என்பது காலந்தோறும் கண்கூடாக அரங்கேறி வரும் காட்சிகள்தான். பாமக, மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக தொடங்கி இன்றைய மக்கள் நீதி மய்யம் வரை இதுதான் தொடர் கதையாக இருந்து வருகிறது.

ஜெயலலிதா, கருணாநிதி கடைசி தேர்தல்கள்: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தல்கள் மிக முக்கியமானவையாக சரித்திரம் எழுதி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் இரு பெரும் அரசியல் ஆளுமைகளாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மறைந்தார். மற்றொரு முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2018-ம் ஆண்டு காலமானார். இந்த இரு தலைவர்களும் சந்தித்த கடைசி லோக்சபா தேர்தல் 2014.

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தமிழகம் முன்னெப்போதும் சந்தித்திராத பெரும் குழப்பத்துடனேயே இருந்தது. ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுக தனித்தே போட்டியிட்டது. கருணாநிதி தலைமையிலான திமுகவோ, காங்கிரஸ்- இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இல்லாமல் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. தமிழ்நாட்டில் பாஜகவோ பிரம்மாண்ட கூட்டணியாக தேமுதிக, பாமக, மதிமுக, கொதேக, இஜக, புதிய நீதிக் கட்சி என மெகா கூட்டணி அமைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட்டன. ஜெயலலிதா தாம் சந்தித்த கடைசி லோக்சபா தேர்தலை தனித்தே களம் கண்டார். கருணாநிதி தாம் சந்தித்த கடைசி தேர்தலை பிரதான கூட்டணி கட்சிகள் இல்லாமல் களம் கண்டார். அதாவது தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் தனித்தே களம் காண வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி இருந்தது. ஒருவகையில் கட்சிகளின் பலத்தை அறிந்து கொள்ளக் கூடிய தேர்தலாகவும் இருந்தது என்பதுதான் உண்மை.

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்: 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அண்ணா திமுக 37 இடங்களில் வென்றது; பாமக ஒரு இடத்திலும் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் பெரும் தோல்வியைச் சந்தித்தன. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகளை தொகுதி வாரியாக ஆராய்ந்தால் வெற்றியை அறுவடை செய்த அதிமுகவும் திமுகவும் ஒப்பீட்டளவில் இணையான வாக்கு வங்கியை கொண்டிருந்தன. தனித்தே போட்டியிடுவோம் என கங்கணம் கட்டிய காங்கிரஸும் இடதுசாரிகளும் சராசரியாக தொகுதிக்கு 50 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன. சிவகங்கை போன்ற ஒரு சில இடங்களில் அபரிமிதமான வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. கன்னியாகுமரி தொகுதியில் திமுக 4-வது இடத்துக்கு எல்லாம் போனது. சிபிஎம் கட்சி 5வது இடத்தைத்தான் பெற்றது. 2014-ல் கன்னியாகுமரி தேர்தல் முடிவுகள்: பொன். ராதாகிருஷ்ணன் (பாஜக) 3,72,906; எச். வசந்தகுமார்(காங்கிரஸ்) 2,44,244; டி. ஜான்தங்கம் (அதிமுக) 1,76,239; எப். எம். ராஜரத்தினம் (திமுக) 1,17,933; . வி. பெல்லார்மின் (சிபிஎம்) 35,284. இப்படியும் ஒரு சில முடிவுகள் அமைந்திருந்தன. ஜெயலலிதா தாம் சந்தித்த கடைசி லோக்சபா தேர்தலில் அபரிதமான செல்வாக்கை நிரூபித்திருந்தார். கருணாநிதி தாம் சந்தித்த கடைசி லோக்சபா தேர்தலில் திமுகவின் எதிர்காலம் குறித்த பெரும் கேள்வியை எழுப்பிவிட்டுச் சென்றார்.

'தலைவர்' ஸ்டாலின் சந்தித்த தேர்தல்: அடுத்ததாக 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் களத்தை எடுத்துக் கொள்ளலாம். ஜெயலலிதா, கருணாநிதி என இரு தலைவர்கள் இல்லாமல் சமீபத்தில் அதிமுக, திமுக சந்தித்த முதல் லோக்சபா தேர்தல். தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரிந்த ஒரே ஆளுமையாக இருந்தவர் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு ஆளுமையாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த தருணம்.

2019 தேர்தல் களம்: கருணாநிதி இல்லாமல் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக லோக்சபா தேர்தலை திமுக எதிர்கொண்டது. எதிரே நிற்கிற ஆளுமைகள் இல்லாமல் தனித்த ஒரு தலைவராக மு.க.ஸ்டாலின் உருவெடுத்து நிற்க 2019- தேர்தலை திமுக சந்தித்தது. அந்த தேர்தலும் ஒரு சரித்திரம்தான். திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, கொமதேக, முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி என பெரும்பாலான தங்களுக்கென்று, தனித்த வாக்கு வங்கியை கொண்ட கட்சிகள் ஓரணியில் இணைந்தன. அண்ணா திமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவையும் இணைந்து வலிமையான போட்டியை உருவாக்கின. அத்துடன் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவையும் களம் கண்டன. தமிழ்நாட்டின் தேர்தல் களத்துக்கு இது புதியதாகவும் இருந்தது.

2019 தேர்தலில் நடந்த மேஜிக்: 2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன?: திமுக கூட்டணி 38 இடங்களையும் அதிமுக ஒரே ஒரு இடத்தையும்தான் பெற முடிந்தது. திமுக கூட்டணி ஏதோ சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெல்லவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் சராசரியாக 5 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தன. 2014 தேர்தலில் 20 ஆயிரம், 30 ஆயிரம், 40 ஆயிரம் பெற்றிருந்த காங்கிரஸ், இடதுசாரி வேட்பாளர்கள் 3 லட்சம், 4 லட்சம் வாக்குகளைப் பெற்ற மேஜிக் நடந்தது 2019- தேர்தலில்தான்.

2019 தேர்தல் முடிவு சொன்னது என்ன?: ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் திமுக தலைமையிலான மெகா கூட்டணியை நேசித்தும் மதித்தும் இந்த அளவுக்கு வாக்குகளை வாரிக் கொடுத்தனர். ஒருவகையில் தந்தை இல்லாமல் தனித்தே களம் கண்ட மு.க.ஸ்டாலினுக்கு மிகப் பெரிய மாஸ் வெற்றிதான். இதை யாரும் மறுப்பதற்கும் இல்லை. மு.க.ஸ்டாலின் ஒரு ஆளுமைதான்.. அவர் தலைமையிலான மெகா கூட்டணி வியூகம் அற்புதமானதுதான் என்பதை நிரூபித்தது 2019-ம் ஆண்டு தேர்தல்.

2024 தேர்தல் களம் எப்படி இருக்கிறது?: சரி 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் களம் எப்படி இருக்கிறது?: இப்போது தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் எதிர்கொள்கிறார்; அண்ணா திமுகவின் அசைக்க முடியாத "தலைவராக" "பொதுச்செயலராக" எடப்பாடி பழனிசாமி உருவெடுத்திருக்கிறார். 2019 தேர்தலில் இல்லாத ஒன்றாக மு.க.ஸ்டாலினுக்கு இணையானவராக எடப்பாடி பழனிசாமி களத்தில் நிற்கிறார். ஏனெனில் இம்முறை ஆளும் கட்சி என்ற பாரம் ஸ்டாலின் முதுகில் உள்ளது.

இம்முறையும் 2019 தேர்தலுக்கான கூட்டணியையே தொடர்ந்தது திமுக. அண்ணா திமுகவோ பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது. இது 2014-ல் திமுக மேற்கொண்டிருந்த கூட்டணி நிலைப்பாட்டுக்கு ஒப்பானது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்தியில் ஆளும் பாஜக ஆகப் பெரும் ஆட்டத்தை ஆடி வருகிறது. பாஜகவில் இருக்கிற அத்தனை சீனியர்களையும் இந்த தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக இறக்கிவிட்டுள்ளது (எச்.ராஜா தவிர). ஆளுநர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன், போட்டியிடுகிறார்.

2024 தேர்தல் சொல்லப் போகும் முடிவுகள் என்ன?: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல்தான் உண்மையிலேயே யார் சரியான ஆளுமை? தமிழ்நாட்டு மக்கள் யார் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்? என்பதை வெளிப்படுத்தக் கூடிய தேர்தலாக இருக்கப் போகிறது. அத்துடன் இது வெறும் கூட்டணி மற்றும் தேர்தல் முடிவுகள் சார்ந்தும் இருக்கப் போவதும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் கட்டுக் கோப்பையும் பிடியையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவின் கட்டுக் கோப்பையையும் பிடியையும் தீர்மானிக்கிற தேர்தலாக அதாவது யார் ஆளுமை என்பதை வெளிப்படுத்தப் போகிற தேர்தலாகவும் அமையக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

2024 தேர்தலுக்குப் பின் என்ன நடக்கும்?: இத்தேர்தலில் பலவீனத்தை சந்திக்கப் போகும் கட்சி இடத்தை பாஜக பிடிக்க விரும்புகிறது என்பதையே அந்த கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரசாரங்கள் வெளிப்படுத்தியும் கொண்டிருக்கின்றன. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் என்பது ஸ்டாலினா? எடப்பாடியா? என்பதை மட்டுமல்ல இனி திமுக- பாஜகவா? அதிமுக- பாஜகவா? அல்லது திமுக- அதிமுக- பாஜகவா? என்பதையும் கோடிட்டுக் காட்டப் போகிற தேர்தலாகவும் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+