அன்று தேடி வந்தனர்.. இன்று காத்திருந்தும் பலனில்லை.. ‘கட்சிக்கே அவமானம்’ - புலம்பும் ர.ரக்கள்!
சென்னை : பிரதமராக இருந்த நரேந்திர மோடி, முதல்வராக இருந்த ஜெயலலிதாவை வீட்டுக்கே தேடிச் சென்று சந்தித்த காலம் போய், இப்போது அதிமுக தலைவர்கள் மோடியால் அவமதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக புலம்புகின்றனர் அதிமுகவினர்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, டெல்லியின் ஆதரவைப் பெறுவதற்காக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே மாறி மாறி காய் நகர்த்தி வருகின்றனர்.
டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச முயன்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரின் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன.

டெல்லி பயணம்
ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, தனக்கு ஆதரவாக பாஜக தலைமையின் கவனத்தைத் திருப்பும் முயற்சியாக கடந்த 22ஆம் தேதி டெல்லி சென்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றதாக கூறப்பட்டாலும், டெல்லியில் தங்கி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, அதிமுகவின் நிலை குறித்துப் பேசுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஈபிஎஸ் ஏமாற்றம்
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருந்தார். ஆனால், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவருமே எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை. பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஏமாற்றத்தோடு தமிழகம் திரும்பினார் ஈபிஎஸ்.

ஓபிஎஸ்ஸும்
முன்னதாக, கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு முடிந்ததுமே பாஜக தலைமையின் ஆதரவு கேட்டு டெல்லி சென்றார் ஓபிஎஸ். அங்கு திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்கச் சென்றதாக கூறப்பட்டாலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்காகவே சென்றிருந்தார் பன்னீர். இருவருமே ஓபிஎஸ் உடனான தனிப்பட்ட சந்திப்பைத் தவிர்த்த நிலையில், பாஜகவின் மேலிட புள்ளிகளைச் சந்தித்து விட்டு சென்னை திரும்பினார்.

சந்திக்க ஆர்வம்
இந்நிலையில், நாளை சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். இருவருமே டெல்லி சென்று ஏமாந்து திரும்பிய நிலையில், சென்னை வரும் பிரதமரை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பாஜகவின் முக்கிய புள்ளிகளை வைத்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

டெல்லி தயவு
நாளையாவது இருவரையும் பிரதமர் மோடி சந்திப்பாரா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக, ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் பாஜக மேலிடத்தை பார்க்கத் துடிப்பது விமர்சனங்களைக் கிளப்பி வருகிறது. என்னதான் கட்சித் தொண்டர்களின் ஆதரவு இருந்தாலும், ஊழல்கள், வழக்குகள் பயத்தால் டெல்லி தயவை நாடும் இந்த நிலையைச் சாடி வருகின்றனர். அதிமுக தொண்டர்களும் இந்த விஷயத்தில் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளனர்.

புலம்பும் ர.ரக்கள்
ஜெயலலிதா இருந்தபோது, மற்ற கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் காத்திருந்து அவரைச் சந்தித்துச் செல்வார்கள். அதிமுகவுக்கு என்று ஒரு மரியாதை இருந்தது. இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் செயல்களால் அதிமுகவின் மீது மக்களுக்கு இருந்த நன்மதிப்பே போய்விட்டது. உட்கட்சிப் பிரச்சனைக்கெல்லாம் பாஜக உதவியைத் தேடும் சூழல் இருந்தால், பொதுமக்கள் நம்மை நம்பி எப்படி வாக்களிப்பார்கள் என புலம்புகின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

2015ல் நடந்தது என்ன
கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார் பிரதமர் மோடி. அந்த விழாவில் உடல்நிலையைக் காரணம் காட்டி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை. பின்னர், அந்த அரசு விழா நிறைவடைந்ததும், போயஸ் தோட்ட இல்லத்திற்கே சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து, மனுக்களை வாங்கிச் சென்றார் பிரதமர் மோடி.

இப்படி ஆகிவிட்டதே
ஆனால், இன்று ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே டெல்லி சென்றும் பிரதமரைச் சந்திக்க முடியாமல் திரும்புகின்றனர். நாளையும் கூட பிரதமர் மோடி இருவரையும் சந்திப்பாரா இல்லை மீண்டும் அப்பாயின்மெண்ட் மறுக்கப்படுமா என்ற மில்லியன் டாலர் கேள்வியே ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்பு இருக்கிறது. இதனால், அதிமுகவின் நிலை இப்படி ஆகிவிட்டதே என முணுமுணுக்கின்றனர் அக்கட்சித் தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications