கருணாநிதி பேனா.. எதற்கு பதறுகிறீர்கள்? அலைகளில் முடிவுற்ற சொற்களை எழுதும் என்றா? மனுஷ்ய புத்திரன்
அலைகளின் மேல் முடிவுற்ற சொற்களை கருணாநிதியின் பேனா எழுதிக்கொண்டே இருக்கும் என்று தானே அதற்கு பதறுகிறீர்கள்? என கவிஞர் மனுஷ்ய புத்திரன் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: மெரினா கடற்கரை அருகே கடலுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனாவிற்கு சிலை வைப்பதற்கு அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அலைகளின் மேல் முடிவுற்ற சொற்களை அது எழுதிக்கொண்டே இருக்கும் என்று தானே அதற்கு பதறுகிறீர்கள்? என்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் தெரிவித்து இருக்கிறார்.
மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடம் அமைக்கும் பணிகளை அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.
அந்த நினைவிடத்துடன் கருணாநிதியின் எழுத்தாற்றலையும் அவர் கையெழுத்திட்ட திட்டங்களையும் போற்றும் வகையில் அவரது பேனாவுக்கு அவரது நினைவிடம் அருகே கடலுக்கு நடுவே சிலை வைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

ஆதரவும் எதிர்ப்பும்
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடலுக்கு நடுவே பேனா சிலை வைப்பதால் கடலில் சூழலியல் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கருத்துக் கேட்புக்கூட்டம்
இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், மீனவர் சங்க பிரதிநிதிகள், சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

சீமான் பேச்சால் சர்ச்சை
இதில் பங்கேற்ற பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். குறிப்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "கடலுக்குள் கருணாநிதி பேனாவுக்கு நினைவு சின்னம் வைக்க வேண்டுமென்றால் அங்கு மண், கற்களை கொட்ட வேண்டும்.

அறிவாலயத்தில் சிலை வையுங்கள்
பவளப்பாறைகள் பேனா சிலை காரணமாக பாதிக்கப்படும். பள்ளிகளை சீரமைக்க பணம் இல்லை என்று சொல்லும்போது பேனா சிலை அமைக்க எப்படி பணம் வந்தது. பேனாவுக்கு சின்னம் வைக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அறிவாலயத்தில் வேண்டுமானால் பேனா சிலை வைத்துக்கொள்ளுங்கள்.

சிலையை உடைப்பேன்
பேனா சிலையை கடலுக்கு நடுவே எழுப்புவதை அனுமதிக்க முடியாது. உங்களுக்கு எதை பற்றியும் கவலை கிடையாது. கடற்கரையில் புதைக்க விட்டதே தவறு. பேனா சிலையை கட்டினால் நான் அதை ஒருநாள் உடைப்பேன்." என்று கூறினார். சீமானின் இந்த பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கருத்துக் கேட்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மனுஷ்ய புத்திரன் ட்விட்டர் கருத்து
இதுகுறித்து ட்விட்டரில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கடல் நடுவே
ஒரு பேனாவை
கொண்டு போய்வைத்தால்
எதற்குப் பதறுகிறீர்கள்?
அலைகளின் மேல்
அது முடிவற்ற சொற்களை
எழுதிக்கொண்டே இருக்கும்
என்றுதானே?
அலைகள் இருக்கும்வரை
அதில் எழுதிய
நீதியின் சொல் அழியாது" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications