இது உள்கட்சி விவகாரம் தானே.. ஓபிஎஸ், இபிஎஸ்ஸை பாஜக தலைவர்கள் சந்தித்தது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை பாஜக மேலிட தலைவர் சிடி ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்ததை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்விகள் எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது. இந்த கூட்டத்தில் கடுமையான கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார்! ஆனால் ஒரு கண்டிஷன்.. வைத்திலிங்கம் பரபரப்பு
ஒற்றை தலைமை விவகாரத்துக்கு தொடக்கம் முதலே ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதில் உறுதியாக உள்ள ஓ பன்னீர்செல்வம் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிப்பு
பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான எம்பி சிவி சண்முகம் கூறினார். மேலும் ஓ பன்னீர் செல்வத்தை எதிர்க்கும் வகையிலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்துடன் இந்த தீர்மானம் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என எம்பி சிவி சண்முகம் பேசினார்.

வெளியேறிய ஓபிஎஸ்
மேலும் ஜூலை 11ம் தேதி உண்மையான பொதுக்குழு நடக்கும் அன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அவைத்தலைவர் அறிவித்தார். இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஓ பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் மற்றும் காகிதம் வீசப்பட்டது.

பாஜக தலைவர்கள் சந்திப்பு
இதையடுத்து தான் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினர். இதேபோல் அவர்கள் இருவரும் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்தனர். இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி இடையேயான பிரச்சனை குறித்து பாஜக தலைவர்கள் சமாதானம் செய்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.

ஜெயக்குமார் விளக்கம்
இது ஒருபுறம் இருக்க ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு வழங்ககோரியதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து அதிமுக, பாஜக தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆயினும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தான் சந்திப்பு நடந்துள்ளதாக தெரிவித்தார்.

ஜோதிமணி எம்பி விமர்சனம்
இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உடனான பாஜக தலைவர்கள் சந்திப்பை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛அதிமுக பொதுக்குழு முடிந்ததும் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? நடப்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அல்லவா?'' என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா என அவர் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.