சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'கல்விக்கு செலவு செய்வது மாநில அரசு; உரிமை ஒன்றிய அரசுக்கா?' - ஸ்டாலின் எழுப்பிய குரல் சரியா.. தவறா?

Google Oneindia Tamil News

சென்னை: மீண்டும் ஒரு தரமான சம்பவத்தைச் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ' கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' எனப் பிரதமர் மோடியின் முன்னிலையில், ஸ்டாலின் வைத்த கோரிக்கைதான் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவை திறம்படச் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது" என்றார்.

 Why does CM Stalin wants to move education to state list? What is the reason behind it?

ஸ்டாலின் செய்த இரண்டாவது சம்பவம்

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கல்வி ஒன்றுதான் எந்த ஒரு சூழ்நிலையிலும் யாராலும் அழிக்க முடியாத சொத்து. அதை வழங்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. அதற்கு இந்திய அரசு துணை நிற்க வேண்டும். எனவே, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்" எனப் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாட்டுக்குப் பிரதமர் மோடி வரும்போதெல்லாம் மாநிலத்துக்குத் தேவையான உரிமைகளை முன்வைப்பது முதலமைச்சர் ஸ்டாலினின் வழக்கம். இதற்கு முன்பாக கடந்த மே மாதம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க மோடி வந்தார்.

அப்போது, 'சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் இவை எல்லாம் சேர்ந்ததுதான் 'Dravidian model' என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை உடனே விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சரின் அந்தப் பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியது. இன்றும் அதேபோல, 'கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்' என நேரடியாகக் கேட்டிருக்கிறார்.

 Why does CM Stalin wants to move education to state list? What is the reason behind it?

சட்டம் என்ன சொல்கிறது?

மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என்றால் பலருக்கும் புரிவதில்லை. 'கல்வி உரிமையில் மாநில அரசின் உரிமை எந்தளவுக்கு உள்ளது?; 'ஸ்டாலின் முன்வைக்கும் முழக்கத்துக்குப் பின்னால் ஒளிந்துள்ள பொருள் என்ன?' என்பது குறித்தெல்லாம் விரிவான விளக்கம் தேவைப்படுகிறது.

"மூன்று தளங்களில் இருந்துதான் இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தியாவில் பல்வேறு மொழிவாரி இனங்கள் உள்ளதை அங்கீகரித்தனர். பல்வேறு மொழிவாரி மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு ஒன்றியமாகத்தான் இந்தியாவைக் கட்டமைத்தார்கள். அதனால்தான் முதல் ஷரத்திலேயே மிகத் தெளிவாக இந்தியாவைப் பற்றி விவரிக்கும்போது 'india that is bharat shall be a union of states' என்று குறிப்பிட்டார்கள்.

1956 ஆம் ஆண்டுக்குப் பின் 'மொழிவாரி மாநிலங்கள்' பிரிக்கப்பட்டன. அதுதான் இந்தியப் பண்பாட்டின் பிரதிபலிப்பு. ஆகவே, மொழிவாரி மாநிலங்களின் கூட்டு ஒன்றியமாகத்தான் இந்தியா உள்ளது'' என்கிறார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தொடர்ந்து நம்மிடம் பல்வேறு தகவல்களைப் பட்டியலிட்டார். '' அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில அரசு என ஒன்று செயல்படும். ஒன்றிய அரசு என ஒன்று செயல்படும் எனக் கூறப்பட்டபோது, அப்போது, 'யார் யாருக்கு என்ன அதிகாரம்?' என விவாதிக்கப்பட்டது. மக்களின் உடனடி தேவை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் இருக்கக்கூடிய பிரத்யேகமான தேவை ஆகிய அனைத்தும் மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

தரைவழி, கடல்வழி, ஆகாயவழி, பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு, போக்குவரத்து, அந்நிய நாட்டுடனான வெளியுறவுக் கொள்கை என இந்தியா முழுமைக்கும் பொருந்தக் கூடியவற்றை ஒன்றிய அரசின் பட்டியலில் சேர்த்தனர்.

 Why does CM Stalin wants to move education to state list? What is the reason behind it?

மாநில பட்டியல் என்றால் என்ன?

இதில், பட்டியல் ஒன்று என்பது ஒன்றிய அரசின் அதிகாரப்பட்டியல். பட்டியல் இரண்டு என்பது மாநில அரசின் அதிகாரப் பட்டியல். பட்டியல் மூன்று என்பது இந்த இரண்டும் சேர்ந்து ஒத்திசைந்து செய்யக் கூடிய பட்டியல். அதைத்தான் பொதுப் பட்டியல் (concurrent list) என்கிறோம்.

அந்தவகையில், கல்வி, சுகாதாரம் உள்பட எவை எல்லாம் உடனடித் தேவையோ அவை மாநிலப் பட்டியலில் இருந்தன. தொடக்கத்திலிருந்தே இப்படித்தான் இருந்தது. உயர்கல்வியின் தரத்தைத் தீர்மானிக்கும் ஒரு வேலையை மட்டுமே ஒன்றிய அரசின் பட்டியலில் வைத்திருந்தனர்.

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் பல்கலைக்கழகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், ஒன்றிய அரசுக்குக் கொடுக்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தை உருவாக்குதல், ஒழுங்குபடுத்துதல் என அனைத்து அதிகாரமும் இன்றைய தேதி வரை மாநிலப் பட்டியலில்தான் உள்ளது. இதுதான் முதல் தளம்.

இரண்டாவது தளம் என்னவென்றால், மாநிலப் பட்டியலில் கல்வி உரிமை இருந்தபோது மாநில அரசே பள்ளிக்கூடங்களை உருவாக்கியது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்கியது. காமராஜர் ஆட்சியில் 3 கி.மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் 5 கி.மீ ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடம் எனத் தொடங்கினார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளும் மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் எனப் பலவற்றைத் தொடங்கின.

 Why does CM Stalin wants to move education to state list? What is the reason behind it?

தனித்துத் தெரியும் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ளதைப்போன்ற அரசுப் பல்கலைக்கழகங்கள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. மொழிக்கு என ஒரு பல்கலைக்கழகம், விளையாட்டுக்கு என ஒரு பல்கலைக்கழகம், திறந்தவெளிக்கு என ஒரு பல்கலைக்கழகம் என இப்படி துறைசார்ந்து தனித்தனி பல்கலைக்கழகங்களை இந்தியாவில் வேறு எங்கும் பார்க்க முடியாது.

1976 ஆம் ஆண்டில் அவசரநிலை காலத்தில் 42வது அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்தின்படி, எந்தவித விவாதமும் இல்லாமல் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி உரிமையை ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றனர். அதன்பின் ஒன்றிய அரசின் செல்வாக்கு பலவீனப்பட்டு, கல்வியில் தனியார் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒன்றிய அரசே புதிதாக எந்தப் பள்ளியையும் பல்கலைக்கழகங்களையும் முதலீடு செய்து உருவாக்கவில்லை. அவர்கள் கொண்டுவந்தது எல்லாம் திட்டங்கள்தான்.

அடுத்து, மூன்றாவது தளத்துக்கு வருவோம். இன்றுவரை அனைத்து பிள்ளைகளும் படிக்கின்ற பொதுப் பள்ளிகளை யார் நடத்துகிறார்கள்? அதேபோல் கலை அறிவியல் கல்லூரிகளை யார் நடத்துகிறார்கள்? என்பது மிக முக்கியமான கேள்வி.

ஒன்றிய அரசு நடத்துகின்ற அனைத்தும் உயர்கல்வி நிறுவனங்கள்தான். சிறப்புப் பள்ளிகளைத்தான் ஒன்றிய அரசு நடத்துகிறது. 'கேந்திரிய வித்யாலயா' என்பது பணிமாறுதலுக்கு உள்ளாகும் மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் படிப்பதற்கானது. 'நவோதயா' என்பது மாவட்டத்துக்கு ஒரு பழங்குடி மக்கள் என்பதற்காக உருவாக்கப்பட்டது. சைனிக் பள்ளி என்பது ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கானது.

அப்படிப் பார்த்தால் பொதுக் கல்விச்சாலையை மத்திய அரசு நடத்தவில்லை. பொதுப் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மாநில அரசு நடத்துபவை. செலவு, நிர்வாகம் என அனைத்தையும் மாநில அரசே ஏற்கிறது. செலவு செய்யும் மாநில அரசுக்குக் கல்வியின் உரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்க வேண்டுமா? இல்லையா? அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்கிறார். அதிலென்ன தவறு? நிதியைச் செலவு செய்யும் பொறுப்பைக் கொடுத்துள்ளீர்கள், அதிகாரத்தை மட்டும் ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்?

Why does CM Stalin wants to move education to state list? What is the reason behind it?

எந்த வகையிலும் நியாயமல்ல

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) நோக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்துவிட்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கியது தமிழ்நாடு அரசு. சென்னைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதும் செலவு செய்வதும் தமிழ்நாடு அரசுதான். ஆனால், தரத்தை நிர்ணயிப்பது, துணைவேந்தர்களை நியமிப்பது, கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் எனத் தீர்மானிப்பது ஒன்றிய அரசின் வேலையாக இருக்கிறது.

இது எந்த வகையிலும் நியாயமல்ல. ஆகவேதான், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதன் இறுதி இலக்காகத் தமிழகம் வந்த மோடியிடமே நேரடியாக முறையிட்டிருக்கிறார். இது வரவேற்க வேண்டிய கோரிக்கை" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

English summary
Why does CM Stalin wants to move education to state list from concurrent list? What is the reason behind it?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X