இரட்டை கொள்கை.. ரொம்பவே தப்பு! பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில்.. திமுக அரசை சாடும் தொல்.திருமாவளவன்
சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய மக்களை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று நேரில் சந்தித்தார்.
இந்தியாவில் மிகவும் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளது. நகருக்குள்ளேயே இருப்பதால் மீனம்பாக்கத்தைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், விமானச் சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

பரந்தூர் ஏர்போர்ட்
இதையடுத்து சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு கடைசியில் பரந்தூரில் இரண்டாவது ஏர்போர்ட்டை அமைக்க முடிவு செய்தனர். அதன்படி நகருக்கு வெளியே சுமார் 69 கிமீ தொலைவில் இந்த புதிய விமான நிலையம் அமைய உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 13 கிராமங்கள் இந்த விமான நிலையத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

மக்கள் போராட்டம்
காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம்,மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் சிங்கிலிபாடி என மொத்தம் 13 கிராமங்களில் 4750 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய ஏர்போர்ட் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன்
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அப்போது தொல்.திருமாவளவனின் காலில் விழுந்து கதறி அழுதபடி தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் என்றும், இங்கேயே வசிக்க வழிவகை செய்யக் குரல் கொடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர். மேலும், விமான நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இந்து கோயில்கள்
100 ஆண்டுகள் வரலாற்றைச் சுமக்கும் நூற்றுக்கணக்கான கோவில்களை அழிப்பதும் ஆரோக்கியமானதல்ல. விமான நிலையத்திற்குக் கையகப்படுத்தும் நிலங்களில் நூற்றுக்கணக்கான இந்து கோவில்கள் உள்ளன. அவை அழிக்கப்படும் நிலை ஏற்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசுத் திட்டத்தை மாற்ற வேண்டும். மக்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை அரசு உணர வேண்டும்.

செம்பரம்பாக்கம்
சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய செம்பரம்பாக்கம் ஏரி. அந்த ஏரிக்கே நீர் ஆதாரமாக திகழ்ந்து, வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் விவசாயத்தைக் காப்பது கம்பன் கால்வாய். பரந்தூர் ஏர்போர்ட்டிக்காக சுமார் 7 கி.மீ தூரம் அந்த ஏரி இடிக்கப்படுவதும் சரியான நடைமுறை இல்லை. இது மட்டும் நடந்தால் அந்த கால்வாய் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கும் செல்லும் நீர் பாதை நின்றுவிடும். செம்பரம்பாக்கம் ஏரிக்குக் கிடைக்கும் நீர் ஆதாரமும் பாதிக்கப்படும். இதை முதல்வரிடம் தெரியப்படுத்துவேன்" என்று அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications
