#Exclusive திரைமறைவில் எடப்பாடி கணக்கு.. "4 உள்ளே.. 15 வெளியே".. இதென்ன மேட்டர்? கேசி பழனிசாமி பரபர!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிக்கத் தயங்குவதற்கு என்ன காரணம் எனக் கூறியுள்ளார் கேசி பழனிசாமி.
சென்னை : "ஓபிஎஸ் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு என்று சொல்கிறார். ஈபிஎஸ், ஒருபுறம் பாஜகவை எதிர்ப்பது போன்ற தோற்றத்தை காட்டிக்கொண்டு, திரைமறைவில் பாஜகவின் உத்தரவுக்கு கீழ்படிபவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, பாஜக முடிவைச் சொல்லாமல் இழுத்தடிப்பதால், வேட்பாளரை அறிவிக்கத் தயங்குகிறார் எடப்பாடி பழனிசாமி" என நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று (ஜனவரி 31) தொடங்கிய நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
எப்போதும், முதல் ஆளாக களத்திற்கு வரும் அதிமுக இந்த முறை பாஜகவின் இழுத்தடிப்பு முயற்சிகளாலேயே தாமதிப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் இதுதொடர்பாகப் பேசி இருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி. இனி அவரது பேட்டி:

ஈபிஎஸ் சுணக்கம்
கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. ஆனால், ஆரம்பத்தில் வேகம் காட்டிய ஈபிஎஸ் இப்போது சுணங்கியது போலத் தெரிகிறதே.. வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லையே.. ஏன் இன்னும் தாமதம்? அணிக்குள் என்ன நடக்கிறது?
பதில் : இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு, ஓ.பன்னீர்செல்வத்தையும், மற்றவர்களையும் ஒதுக்கிவிட்டு, அதிமுகவை அபகரிக்கவும் தான் மட்டுமே ஒற்றைத் தலைமையாக உருவெடுக்கவும் இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அதற்காக தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம், கட்சி பெயர் ஆகியவற்றைப் பெறுவதில் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் கட்சி சின்னமே இல்லாமல் நின்று வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுகவை தோற்கடித்தால் அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு உரியவராக இருப்பார். ஆனால், அதில் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டவில்லை.

ஈபிஎஸ் குறி
கேள்வி : இரட்டை இலை சின்னத்தோடு நின்றால் தானே எதிர் தரப்புடன் மோத சரியாக இருக்கும்.. இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்ஸுக்கு கிடைக்குமா?
பதில் : அப்படியென்றால், ஒன்றுபட்ட அதிமுகவை கொண்டு திமுகவை தேர்தலில் தோற்கடிக்கும் வகையில் வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளையும் கேள்வி கேட்கும் வகையில் அதிமுகவை கட்டமைக்க வேண்டும். ஆனால் அதைச் சீர்குலைத்துவிட்டு, கட்சியை தன்னகப்படுத்துவதற்காக, சர்வாதிகாரப் போக்கில் கட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் தான் ஈபிஎஸ் இருக்கிறார்.

எடப்பாடிக்கு பயம்
கேள்வி : கட்சி எங்களிடம் இருக்கிறது, பொதுக்கு உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்று ஈபிஎஸ் தரப்பினர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆனால், வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பிறகும் வேட்பாளரை அறிவிக்கவில்லையே? போட்டியிட யாரும் முன்வரவில்லையா? வேறு குழப்பங்கள் இருக்கின்றனவா?
பதில் : பாஜக உத்தரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ்ஸும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஓபிஎஸ் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு என்று சொல்கிறார். ஆனால், ஈபிஎஸ், ஒருபுறம் பாஜகவை எதிர்ப்பது போன்ற தோற்றத்தையும், மறுபுறம் திரைமறைவில் பாஜகவின் உத்தரவுக்கு கீழ்படிபவராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, பாஜக முடிவைச் சொல்லாமல் இழுத்தடிப்பதால், வேட்பாளரை அறிவிக்கத் தயங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.

வலிமை - துணிவு
கேள்வி : எடப்பாடி பழனிசாமி, தங்கள் அணி இடைத்தேர்தலில் போட்டியிடும் என பாஜகவிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறதே?
பதில் : மோடியா லேடியா என்று எதிர்த்து நின்ற கட்சி. எந்த கூட்டணி கட்சி துணையும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கட்சி. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களம் கண்டு அதிக இடங்களைப் பிடித்த கட்சி. எனவே பாஜகவை கேட்டுவிட்டுத்தான் பணியாற்ற வேண்டும் என்று இல்லை. தனது 'வலிமை'யை நிரூபிக்கும்'துணிவு' இருந்தால் களத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். ஏன் பாஜகவுக்கு பயப்படுகிறார்? அவர் மீது இருக்கும் வழக்குகள், அவருடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள், மத்திய விசாரணை அமைப்புக்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடுமோ என்ற அச்சம் இவர்களை பாஜகவுக்கு எதிராகச் செயல்பட விடாமல், அவர்களை நோக்கிப் பணிய வைக்கிறது.

எடப்பாடி ஒப்புக்கொண்டுள்ளார்
கேள்வி : ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் பாஜக களமிறங்கினால், எடப்பாடி பழனிசாமியும் களத்தில் நிற்கும் பட்சத்தில், எடப்பாடி பாஜகவுக்கு பயப்படவில்லை என்ற முடிவுக்கு வரலாமா?
பதில் : பாஜக நின்றாலும் நாங்கள் களத்தில் நிற்போம் என்ற முடிவை எடுத்துவிட்டால், இவ்வளவு நாட்களாக வேட்பாளரை அறிவிக்காமல் தாமதம் செய்வதற்கு அவசியமே கிடையாது. அதிகாரப்பூர்வமாக பாஜகவிடம் சென்று ஆதரவு கேட்டுவிட்டார்கள். இனி பின்வாங்கப் போவதில்லை என்றால் வேட்பாளரை அறிவித்துவிட்டு களத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியது தானே? எதற்காக காத்திருக்கிறார்கள்? காத்திருப்பதன் நோக்கம், எடப்பாடி பழனிசாமி என்ற தனி மனிதனுக்கு எந்த மதிப்பும் இல்லை. அதிமுக என்ற பெயர், இரட்டை இலை என்ற சின்னம் ஆகியவற்றிற்குத்தான் மதிப்பு இருக்கிறது என்பதையும், பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பதையும் ஒப்புக்கொள்ளும் வகையில் தான் ஈபிஎஸ்ஸின் செயல்பாடுகள் இருக்கின்றன.

ஓட்டுக்கு 10 ஆயிரம்
கேள்வி : கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி ஈரோடு பகுதியிலேயே இருக்கிறார்.. அடிக்கடி ஆலோசனை நடத்துகிறார், முன்னாள் அமைச்சர்களை களத்தில் இறக்கியுள்ளார்.. இந்த இடைத்தேர்தலை ஈபிஎஸ், கௌரவப் பிரச்சனையாகப் பார்க்கிறாரோ?
பதில் : வாக்குக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து, 100, 150 கோடி செலவு செய்து வெற்றி பெற்றுவிட்டால், தான் அதிமுகவின் தலைவராக உருவாகி விடலாம் என நினைக்கிறார். ஆனால், ஆர்கே நகரில் அதே பாணியில் வென்றாலும் தினகரன் பின்னால் ஒட்டுமொத்த அதிமுகவும் போய்விடவில்லை. ஈபிஎஸ்ஸுக்கு அந்த அச்ச உணர்வும் இருக்கிறது. இவ்வளவு கோடி செலவு செய்து இதில் வெற்றி பெற்றாலும் கூட, அதிமுக தன் கட்டுப்பாட்டில் வராது என்ற அச்சம் இருக்கிறது. இதனால் தான் அவருக்கு தடுமாற்றங்கள் இருக்கின்றன.

பாஜக கோபம்
கேள்வி : தமாகா தவிர கூட்டணி கட்சிகள் யாரும் வெளிப்படையாக யாரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கவில்லை. பாஜக தங்கள் நிலைப்பாட்டைச் சொல்லவில்லை. இப்படியான சூழலில் தாங்கள் களமிறங்குவதாக எடப்பாடி அறிவித்திருப்பது எவ்வளவு பெரிய ரிஸ்க்?
பதில் : அதிமுக தொண்டர்களின் அடிப்படை கோரிக்கையே பாஜக இல்லாமல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான். அடுத்து ஜான்பாண்டியன் போன்றவர்களுக்கு ஈரோடு பகுதியில் எந்தவித செல்வாக்கும் இல்லை. தமாகா, ஏசி சண்முகம் ஆகியோருக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி உள்ளது. எனவே மற்றவர்கள் இதில் ஒரு பொருட்டே அல்ல. பாஜகவுக்கு 4% ஆதரவு இருக்கலாம். ஆனால், அந்த 4% உள்ளே வரும்போது 15% வெளியே சென்றுவிடுகிறது. எனவே பாஜக கூட்டணியில் இருப்பது நெகட்டிவ் தாக்கத்தையே ஏற்படுத்தும். எதையும் கருதாமல் களத்தை நோக்கி எடப்பாடி பயணிக்கலாம். ஆனால், அதற்கு அவர் பயப்படுகிறார். சின்னம் தேவை என்று நினைக்கிறார். பாஜக தன் மீது கோபம் கொண்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார்.












Click it and Unblock the Notifications