ரூ.100 கோடி நகை, ரூ.25,000 பத்திரிகை, வைதீக திருமணம்.. துரைமுருகன் பேத்தி கல்யாணத்தில் ஏன் சர்ச்சை?
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டுக் கல்யாணம் என்றாலே அரசியல் வட்டாரத்தில் கவனம் திரும்புவது இயல்புதான்... ஆனால், இந்த முறை திருமண ஏற்பாடுகள் தொடங்கி அழைப்பிதழ், நகைகள், விருந்து என ஒவ்வொன்றும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.. அதிலும் திருமணம் நடைபெற்ற முறையைப் பற்றிய ஒரு விவாதம் இப்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது...!!!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா தம்பதியரின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி - தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பிரம்மாண்ட நிச்சயதார்த்தம்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூர் காட்பாடியில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் மணமக்களுக்கு வழங்கப்பட்ட வைர நெக்லஸ், ஒட்டியாணம், வளையல்கள் உள்ளிட்ட காஸ்ட்லியான நகைகள் பலரது கவனத்தையும் ஈர்த்தன. இந்த நகைகள் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தகவல்களும் அப்போது சலசலக்கப்பட்டது..
ரூ.25 ஆயிரம் அழைப்பிதழ்
இந்த திருமணத்திற்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழும், ஸ்பெஷல் கவனம் பெற்றது. மயில் தோகை விரிப்பது போன்ற டிசைனில், தங்க விநாயகர் சிலை மற்றும் விலை உயர்ந்த இனிப்பு வகைகளுடன் டப்பா வடிவில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டிருந்தது. ஒரு அழைப்பிதழின் மதிப்பு மட்டும் ரூ.25 ஆயிரம் என்று கூறப்பட்டது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

யுவன் இசைக் கச்சேரி
அக்டோபர் 31-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சிவராஜ்குமார், போனி கபூர், குஷ்பு, வடிவேலு, மீனா, ரோஜா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். வடிவேலு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் உற்சாகமாக டான்ஸும் ஆடியது பெரும் கவனம் பெற்றது.

அரசியல் கட்சிகளை கடந்து பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். திமுகவின் தயாநிதி மாறனும் ஜி.கே.மணியும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
மாதம்பட்டி விருந்து
நேற்று அதாவது நவம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மணமக்கள் அணிந்திருந்த ஆபரணங்களும் திருமணத்தின் பிரம்மாண்டமும் பேசப்பட்ட நிலையில், விருந்துக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தலைமையிலான குழுவினர் உணவு தயாரித்துப் பரிமாறினர். விருந்தினர்களிடம் உணவு நன்றாக இருக்கிறதா என்றும் அன்புடன் விசாரித்த மாதம்பட்டி ரங்கராஜின் வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகின.
டாக்டர் செந்தில் விமர்சனம்
இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில், அரசியல் வட்டாரத்தில் வேறு ஒரு விவாதமும் எழுந்துள்ளது.. திமுக தலைவர்களின் குடும்பங்களில் வழக்கமாக சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறும் நிலையில், செந்தாமரை - தீபக் ரவி திருமணம் ஐயர் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் ஓத வைதீக முறைப்படி நடைபெற்றது.

இதற்கு திமுக முன்னாள் எம்.பி டாக்டர் செந்தில்குமார் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்... திருமண வீடியோவை ஷேர் செய்து அவர் வெளியிட்ட பதிவில், "மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களை பிரகடனப்படுத்திய கொள்கை பிடிப்புள்ள கழகத்தில் அதனை கடைபிடிக்க கூடிய வாய்ப்பினை தவறவிட்டதில் தனிபட்ட முறையில் உடன்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இப்படி திருமண ஏற்பாடு, அழைப்பிதழ், நகைகள், விருந்து என ஒவ்வொன்றும் பேசப்பட்ட நிலையில், இறுதியில் திருமணம் நடைபெற்ற முறை திமுகவின் கொள்கை குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
