செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு? தமிழகம் முழுவதும் திமுக இந்தி திணிப்பு எதிர்ப்பு போஸ்டர் யுத்தம்!
சென்னை: தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக அனைத்து வழிகளிலும் திமுக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட பல நகரங்களில் செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு என்பது உள்ளிட்ட வாசகங்களுடன் திமுகவினர் சுவரொட்டி மூலம் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க காலந்தோறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் நாடு விடுதலைக்குப் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய,முயற்சிகளுக்கு எதிராக தமிழ்நாடு வீரம் செறிந்த மொழிப் போரை நடத்தியது. இந்த மொழிப் போரில் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்தும் துப்பாக்கி குண்டுகள் தாங்கியும் வீரமரணம் அடைந்தனர். உலகிலேயே தாய்மொழி காக்க இப்படி இன்னுயிர் ஈந்த மான மறவர்களைக் கொண்ட நிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கொள்கை மூலமாக இந்தி மொழி திணிப்பை மேற்கொண்டுள்ளது. இத்தகைய புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தால் மாநிலங்களுக்கு நிதி தர முடியாது என சட்டாம்பிள்ளைத்தனம் செய்கிறது மத்திய அரசு. இதனால் தமிழ்நாட்டில் 40 லட்சம் குழந்தைகளின் கல்வி பாழாகும் பேராபயம் உருவாகி உள்ளது.
மத்திய அரசின் இத்தகைய இந்தி திணிப்பு முயற்சிக்கு பாஜக தவிர அனைத்து கட்சிகளுமே கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அனைத்து கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். வீடுகள் தோறும் கோலங்கள் மூலமாகவும் இந்தி திணிப்பை எதிர்த்து போராடுகிறது தமிழ்நாடு.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆளும் திமுகவினர், இந்தி மொழி திணிப்புக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டி இருக்கின்றனர். அரியலூரில், தமிழ்நாடு வரைபடத்துடன் செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு என்கிற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மொழிப்போர் ஓயாது!












Click it and Unblock the Notifications