தலையை குனியும் தாமரை? ஓபிஎஸ்ஸை ‘கை’ விடும் பாஜக? எடப்பாடிக்காக மேலிடம் போடும் பக்கா ப்ளான்! பின்னணி?
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பாஜக தலைமையுடன் எடப்பாடி பழனிச்சாமி மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்காக ஓ.பன்னீர்செல்வத்தை கைவிட்டு விடலாமா என பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ,பன்னீர்செல்வம் இடையே ஆறு மாதங்களுக்கு மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. இப்போது அப்போது என முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரை இது அவ்வளவு சீக்கிரம் முடிவது போல தெரியவில்லை.
இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் சீராய்வு மனு தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு என பல்வேறு சிக்கல்கள் அடுத்தடுத்து இருக்கிறது. இருவரும் ஒன்று சேர்ந்தால் தவிர இவ்விவகாரம் அவ்வளவு சீக்கிரம் முடிந்து விடாது என கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

பாஜக தலைமை
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைய வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. அவர்களோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் என கூறிவரும் சசிகலா ஆகியோரும் சேரும்போது அதிமுக கூடுதல் வலிமை பெறும். இதனை பயன்படுத்தி தமிழகத்தில் குறிப்பிடத் தகுந்த அளவு நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என பாஜக தலைமை விரும்புகிறது.

ஆதரவு கிடைக்குமா?
ஏற்கனவே இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்தியா முழுவதும் பாஜக பெரு வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் மண்ணை கவியது. இதனால் தமிழக பாஜக தலைமை அடிக்கடி மாற்றப்பட்டது. தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலை உறுப்பினர் சேர்ப்பு, வாக்குச் சாவடி முகவர்கள் நியமனம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என தீவிர அரசியல் செய்து வருகிறார், ஆனால் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை பழைய பாஜகவாகவே இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மூலம் நான்கு எம்எல்ஏக்கள் கிடைத்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அதே ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

அதிருப்தி
இதில் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என நான்கு பேர் நான்கு அணிகளாக செயல்பட்டு வருவதால் குறிப்பிடத் தகுந்த வெற்றி கிடைக்காது என பாஜக தலைமை நம்புகிறது. எனவே நான்கு பேரையும் ஒன்று சேர்த்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறது இதனை பாஜக எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக பேசினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் உள்ளிட்ட யாரையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவே முடியாது என பிடிவாதமாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. என்ன நடந்தாலும் அதிமுகவை பொறுத்தவரை தான் தலைமை அப்படி இல்லை எனில் பாஜக கூட்டணியிலிருந்து விலகவும் தயார் என்ற ரீதியில் அவர் பேசி வருவது பாஜக தலைவர்களை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஓபிஎஸ்க்கு ஷாக்
அதே நேரத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு நிர்வாகிகள் இருந்தாலும் தமிழகத்தில் பெரிய அளவு தொண்டர்கள் இல்லை. சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் நகர்ப்புற ஊராக உள்ளாட்சி தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பலத்த தோல்வியை சந்தித்தது. அதிமுக ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஓபிஎஸ்க்கு பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி பகைத்துக் கொள்வதை விட எடப்பாடி பழனிச்சாமிக்காக ஓபிஎஸ்சை விலக்கி விடலாமா என பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது.

தீவிர ஆலோசனை
இது தொடர்பாக ஏற்கனவே மத்திய பாஜக தலைமைக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வரும் காலங்களில் தொடர்பான அறிவிப்புகள் ஆலோசனைகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலுக்காக முன்னேற்பாடுகளை செய்யும்படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள், ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளில் கிடைத்த வாக்குகள், தற்போது போட்டியிட போகும் வேட்பாளர்கள், உத்தேச வேட்பாளர் பட்டியல், தகுதியான நபர்கள் என பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தீவிரம்
ஒருபுறம் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என அதிமுக கருதிய நிலையில் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர தனியரசு, தமீமுன் அன்சாரி, கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்டோரையும் கூட்டணியில் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இப்படி எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வரும் நிலையில் அவர் வழியிலேயே சென்றுவிட பாஜக விரும்புவதாக கூறுகின்றனர் மூத்த தலைவர்கள்.












Click it and Unblock the Notifications