பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் வீடு கட்ட, பிளாட் போட கொடுத்த அனுமதியை சிஎம்டிஏ மறுஆய்வு செய்யுமா?
சென்னை: 2015 வெள்ளத்திற்கு பின்னரும் மனசாட்சியே இல்லாமல் பிளாட் போட்டு நிலங்கள் வீடுகள் விற்கப்படுகின்றன. அப்படி விற்கப்பட்ட வீடுகள், பிளாட்டுகள், அடுக்குமாடிகளை மக்கள் பிரச்சனை தெரியாமல் வாங்குகிறார்கள். இந்நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில், ஏரி நிலங்களில் வீடு கட்ட, பிளாட் போட கொடுத்த அனுமதியை சிஎம்டிஏ மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் வெள்ள பாதிப்புவரும் போது எல்லாம் எழும் கோரிக்கை தான் இது.. ஆம் சென்னையில் ஆற்றை ஒட்டிய பட்டா இல்லாத இடத்தில் குடியிருப்போர், தைரியமாக ஆற்றின் கரையை ஒட்டிய பகுதிகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், கடைகள் கட்டி வாடகைக்கு விட்டவர்களை, தயவு தாட்சணையே இல்லாமல் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அதேநேரம் இதில் மிகப்பெரிய சிக்கலும் உள்ளது.. பல ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் வாழ்நாள் சேமிப்பை கொட்டி நிலம், வீடு வாங்கி இருப்பார்கள், அவர்களுக்கு மாற்று இடம் அல்லது அவர்களுக்கான மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து காப்பாற்ற வேண்டும். அதேநேரம் கரைகளை ஆக்கிரமித்து பல வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளவர்கள், கடைகளை கட்டி வாடகைக்கு விட்டவர்கள், பாதைகளை ஆக்கிரமித்து சொகுசு வீடு கட்டியவர்களுக்கு எந்த பாகுபாடும் கட்டாமல் இடித்து தள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களின் இடங்களை பறித்தாலே ஓரளவு நிலைமையை சமாளிக்க முடியும் என்கிறார்கள் வெள்ளத்தால் பாதித்த மக்கள்.
அதேநேரம் இனிமேல் சதுப்பு நிலங்களில் பட்டா வைத்திருந்தாலும் வீடுகள் கட்ட, அடுக்குமாடி கட்ட அனுமதி அளிப்பதிலும் நிறைய மாற்றங்களை கொண்டுவர வேண்டும். வெள்ளம் உள்ளே வரும் வழி, வெளியே செல்லும் வழிகளை வீடுகள் கட்டும் போதே ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம் ஏரி, ஆறு, மற்றும் கால்வாய் நிலங்களை ஆக்கிரமித்தால் கடுமையான தண்டனை உடனே வழங்கப்பட வேண்டும் என்றும், கடந்த 20 வருடங்களில் வழங்கப்பட்ட ஆக்கிரமிப்பு பட்டாக்களை சிஎம்டிஏ மறுஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தாம்பரம் வரதராஜபுரம், தாளம்பூர், முடிச்சூர், ஓஎம்ஆர்பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட வீடு கட்ட, பிளாட் போட கொடுத்த அனுமதியை சிஎம்டிஏ மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், எந்த காரணம் கொண்டும் ஆக்கிரமிப்புகளை ஏற்க கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications