லாஜிக் ஒர்க் அவுட் ஆகுமா.. விஜய்யை தடுக்க ஸ்டாலின், எடப்பாடி இணைவார்களா? 5-ல் 4 தொகுதி தவெகவுக்கா?
சென்னை: 5 இடைத்தேர்தல்களில் தவெகவை எதிர்கொள்ள திமுகவும் அதிமுகவும் கைகோர்க்க வேண்டுமா? 2 கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் தவெகவுக்கு சாதகமாகிவிடுமா? இந்த இரு கட்சிகளுக்கும் சில தொகுதிகளில் இருக்கும் செல்வாக்கை வைத்துப் புதிய தேர்தல் புரிந்துணர்வு ஏற்பட வேண்டிய அவசியம் உள்ளதா? இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்துள்ளன. இந்த 6 மாதங்களில் அரசின் செயல்பாடுகள், கட்சியினரின் நடவடிக்கைகள் எனப் பல விவாதங்கள் எழுந்துள்ளன. அதேநேரத்தில், அடுத்து நடைபெறவுள்ள 5 இடைத்தேர்தல்களும் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளன.

தராசு ஷ்யாம்
இந்த சூழலில், விஜய் ஆட்சியின் செயல்பாடுகள், முதலமைச்சரின் அணுகுமுறை, எதிர்க்கட்சிகளின் அரசியல் வியூகம் எனப் பல்வேறு கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "ஒரு அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள்தான் ஆகியிருக்கிறது என்பதற்காக அந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று நினைப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஒரு ஆட்சியை தொடர வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தான் தேர்தலில் முடிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் பேசி ஒரு அரசைக் கவிழ்ப்பது சரியான ஜனநாயக நடைமுறையாக இருக்காது.
6 மாத ஆட்சி
அதேநேரத்தில், அரசின் குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்ட வேண்டும். விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றைத் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும். குறிப்பாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசு என்பதற்காக எல்லாவற்றுக்கும் கால அவகாசம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது.
அரசின் செயல்பாடுகளை போலவே முதலமைச்சரின் நடவடிக்கைகளும் முக்கியமானவை. ஒரு கட்சியின் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருப்பவர் எப்படி நடந்துகொள்கிறாரோ, அதைப் பார்த்துத்தான் கட்சியில் இருப்பவர்களும் நடந்துகொள்வார்கள்.
விஜய் தந்த தைரியம்
ஒரு எம்எல்ஏவுக்கு இப்படிப்பட்ட தைரியம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுகிறது. அந்தத் தைரியம் எங்கிருந்து வருகிறது? அது திரு. விஜய் அவர்களிடமிருந்துதான் வருகிறது. இதுதான் இதில் உள்ள சிக்கல்.
அதாவது, விஜய் அவர்கள் பொதுவெளியில் நடந்துகொள்ளும் விதம் முக்கியமானது. அவர் முதலமைச்சர். திரைத்துறையில் அவருக்கு பல நண்பர்கள் இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், முதலமைச்சராகப் பொதுவெளிக்கு வரும்போது அவருடைய ஒவ்வொரு செயல்பாடும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கப்படும். இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
இதற்கு எம்ஜிஆரின் பொது வாழ்க்கையை உதாரணமாக சொல்லலாம். அவர் பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். தனது பொது பிம்பத்தைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தினார். அதேபோன்ற பொறுப்பு ஒரு முதலமைச்சருக்கும் இருக்க வேண்டும்.
5 இடைத்தேர்தல்கள்
இப்போது நடைபெறவுள்ள 5 இடைத்தேர்தல்களும் தவெகவுக்கு மட்டுமல்ல, மற்ற அரசியல் கட்சிகளுக்கும் முக்கியமானவை. இந்தத் தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் தனித்தனியாக போட்டியிட்டால், தவெகவுக்கு எதிரான வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அதிமுகவிலிருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் எம்எல்ஏக்கள், அந்தக் கட்சியின் பாரம்பரிய வாக்குகள் அனைத்தையும் தங்களுடன் கொண்டுசெல்வார்கள் என்று சொல்ல முடியாது. அதிமுகவுக்கு என்று தனியான வாக்கு வங்கி இருக்கிறது. அந்த வாக்குகளில் ஒரு பகுதி அதிமுகவிடமே தொடரலாம். இதனால் தவெகவுக்கு எதிரான வாக்குகள் பிரியக்கூடும்.
திமுகவும், அதிமுகவும்..
அதனால் திமுகவும் அதிமுகவும் இந்தத் தேர்தல் சூழலைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், தொகுதி அளவிலாவது ஏதாவது ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா என்று யோசிக்கலாம். அப்படி ஒரு புரிதல் ஏற்பட்டால் தேர்தல் களத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த 5 தொகுதிகளில் சில இடங்களில் சாதகமான நிலை இருக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு, 2 கட்சிகளும் தொகுதி உடன்பாடு போன்ற ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். அது கூட்டணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
விஜய்யின் செல்வாக்கு
விஜய்யின் செல்வாக்கு முழுமையாகக் குறைந்துவிட்டது என்றும் சொல்ல முடியாது. திமுக, அதிமுகவை விரும்பாமல் விஜய்க்கு வாக்களித்தவர்கள் இன்னும் அவரிடம் இருந்து விலகவில்லை. அவர்களுக்கு கால அவகாசம் தேவை. அதனால் 2 கட்சிகளும் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், 5 தொகுதிகளில் குறைந்தபட்சம் 4 தொகுதிகளாவது தவெகவுக்குச் சாதகமாக அமையும்.
ஆக, விஜய் அரசின் 6 மாத செயல்பாடுகளை மக்கள் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதும், எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் எத்தகைய தேர்தல் வியூகத்தை அமைக்கின்றன என்பதும் இனிவரும் அரசியல் நகர்வுகளில் முக்கியத்துவம் பெறும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
