காதலி, அப்பா சிக்கிட்டாங்க.. நிஷாந்த் மிஸ்ஸிங்! மதுரை போலீஸிடமே கண்ணாமூச்சி ஆடும் 21 கோடி கொள்ளையன்
மதுரை: மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காதலியும், தந்தையும் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியான நிஷாந்த் மட்டும் இடத்தை மாற்றி மாற்றி பதுங்கி வருகிறார். 4 நாட்களாகியும் அவரைப் பிடிக்க முடியாததால், தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் தொடர்ந்து போலீசார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் உள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இந்தக் கடை திறக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை கடைக்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். கடையை திறக்க வந்த ஊழியர்கள் நகைகள் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
புதிய நகைக்கடையில் ரூ.21 கோடி கொள்ளை
விசாரணையில் சுமார் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.21 கோடி என போலீசார் தெரிவித்தனர்.
முகத்தை மறைத்துக்கொண்டு, உடல் முழுவதும் கருப்பு துணியை சுற்றியபடி வந்த அந்த நபர் தனி ஒருவனாக கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மதுரை பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவை சேர்ந்த சுரேஷின் மகன் நிஷாந்த் (25) என்பது தெரியவந்தது.
காதலியும் தந்தையும் கைது
நிஷாந்தை பிடிக்க போலீசார் அவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் தனது காதலியான மீனாட்சியுடன் பேசியது தெரியவந்தது. மதுரையை சேர்ந்த மீனாட்சி (23), இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்... கொள்ளைக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் மீனாட்சிக்கு சொந்தமானது. கொள்ளை திட்டத்திலும் அவருக்கு தொடர்பு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மீனாட்சியையும், நிஷாந்தின் தந்தை சுரேஷையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை போலீசார் மீட்டனர்.
ஒரே காலேஜில் படித்த காதல் ஜோடி
நிஷாந்துக்கும் மீனாட்சிக்கும் கல்லூரியில் படித்தபோதே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேருமே மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளனர். பிறகு நிஷாந்த் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
2 பேரும் சேர்ந்து "மீனாட்சி நாச்சியார்" என்ற பெயரில் யூடியூப் சேனலையும் நடத்தி வந்துள்ளனர். நிஷாந்த் வீடியோ எடிட்டிங் வேலை செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீனாட்சியின் வீட்டைக் கட்டி முடிக்கவும், அதற்காக ஏற்பட்ட கடனை அடைக்கவும் நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த காரணத்துக்காகவே இவ்வளவு பெரிய கொள்ளையை அவர் திட்டமிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பல நாட்கள் பிளான் போட்ட நிஷாந்த்
நகைக்கடைக்குள் எப்படி நுழைவது என்பதை நிஷாந்த் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளார். இதற்காக பலமுறை கடைக்குச் சென்று அங்குள்ள வழிகளை நோட்டமிட்டுள்ளார். குறிப்பாக, நவம்பர் 5-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் லிஃப்ட் பராமரிப்பு பகுதி வழியாக உள்ளே செல்ல முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இதையடுத்து நவம்பர் 12-ம் தேதி மீண்டும் வந்த அவர், லிஃப்ட் பராமரிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய கதவு வழியாக உள்ளே சென்றுள்ளார். பின்னர் லிஃப்டுக்காக வைக்கப்பட்டிருந்த கயிறு வழியாக கீழே இறங்கி நகைக்கடை இருந்த முதல் தளத்தை அடைந்துள்ளார்.
கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை தனது தந்தையிடம் கொடுத்துள்ளார். பிறகு மாடக்குளம் கண்மாய் அருகே உள்ள குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவற்றைப் புதைத்து வைத்துள்ளார். கொள்ளையின்போது அணிந்திருந்த உடைகள், கையுறைகள் உள்ளிட்டவற்றையும் அங்கே எரித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இடத்தை மாற்றி மாற்றி பதுங்கும் நிஷாந்த்
காதலியும், தந்தையும் போலீசில் சிக்கியுள்ள நிலையில் நிஷாந்த் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் ஒரே இடத்தில் தங்காமல், பல்வேறு இடங்களுக்கு மாறி வருவதால் போலீசாரால் அவரைப் பிடிக்க முடியவில்லை... நிஷாந்தை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் தமிழகத்துக்குள் எங்காவது பதுங்கியிருக்கிறாரா அல்லது வேறு மாநிலத்துக்கு தப்பிச் சென்றுவிட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்காக பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்கள் என பல இடங்களில் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.. நவம்பர் 15-ம் தேதியும் 4-வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
இதனிடையே, மாடக்குளம் கண்மாய் கரையில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடம், நிஷாந்தின் வீடு, மீனாட்சியின் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் மீண்டும் சோதனை நடத்தினர். ஆனாலும் நிஷாந்த் மட்டும் சிக்கவில்லை.
நகைக்கடைகளின் பாதுகாப்பு எங்கே?
புதிதாக திறக்கப்பட்ட ஒரு பெரிய நகைக்கடையிலேயே ரூ.21 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். குறிப்பாக, கடைக்குள் நுழையும் வழிகளை முன்கூட்டியே நோட்டமிட்டு, பல நாட்கள் திட்டமிட்டு இந்த கொள்ளை நடந்துள்ளதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரவு நேரங்களில் நகைக்கடைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கிறதா, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகின்றனவா, அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்விகளையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
ரூ.21 கோடி கொள்ளை வழக்கில் ஒரு பகுதி நகைகள் மீட்கப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் இன்னும் போலீசிடம் சிக்கவில்லை. அவர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதே இப்போது போலீசாருக்கு உள்ள முக்கிய சவாலாக இருக்கிறது..!!


Click it and Unblock the Notifications
