பிரதமர் மோடியின் போஸ்டரில் சாணி அடித்த பெண்.. சிசிடிவி கேமராவில் பதிவு.. பாஜக போராட்டம்-பரபரப்பு
சென்னை: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரில் பெண் ஒருவர் சாணி அடித்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பிரதம் நரேந்திர மோடி கடந்த 17 ம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை இந்தியா முழுவதும் பாஜகவினர் கொண்டாடினர்.
தமிழகத்திலும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

சென்னையில் பாஜக போஸ்டர்
இதேபோல் சென்னையில் பல இடங்களில் பாஜகவினர் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தனர். இதற்கிடையே மேற்கு தாம்பரம் முல்லை நகர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை தாம்பரம் நகர பாஜக தலைவர் கணேஷ் ஏற்பாடு செய்திருந்தார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

போஸ்டரில் சாணி அடிப்பு
இந்த நிகழ்ச்சிக்காக முல்லை நகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜக தலைவர்களின் படங்களுடன் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு சுவர்களிடம் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் முல்லை நகர் பிரதான சாலையில் பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்கள் இருந்த போஸ்டரில் சாணி அடிக்கப்பட்டு இருந்தது.

பாஜகவினர் சாலைமறியல்
இதனை பார்த்து பாஜகவினர் கோபமடைந்தனர். இதையடுத்து பாஜக கட்சியினர் தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலையில் திரண்டு வந்து மறியலில் ஈடபட்டனர். சாணி அடித்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். போஸ்டரில் சாணி அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

சிசிடிவியில் பதிவான பெண்
இதையடுத்து பாஜகவினர் மறியலை கைவிட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். இதுதொடர்பாக அந்தபகுதியில் உள்ள சிசிடிவி கேமரக்காள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் சாணி அடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து அந்த பெண் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தின வருகின்றனர்..












Click it and Unblock the Notifications