'தொடங்கியது'.. டிஜிட்டல் வடிவில் கோவில் ஆவணங்கள்! சொன்னபடி செய்த அமைச்சர் சேகர் பாபு!
சென்னை: கோவில் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் பணி தொடங்கி உள்ளது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்த தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் காரணமாக அழியும் நிலையில் இருந்த பழமையான கோயில் ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றி டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் எந்த கோயில் ஆவணங்களையும், ஆன்லைனிலேயே அடுத்த ஆறு மாதத்தில் பார்க்க முடியும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பாதுகாப்பு
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் மேற்கொண்டு வருவது போன்று இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் ற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுகுதியாக இத்துறையின் பழமையான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை டிஜிட்டல் முறையில பாதுகாக்கும் திட்டமும் ஒன்றாகும்.

தொடங்கி வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழமையான கோப்புகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்,

பாதுகாக்கப்படும்
இந்து சமய மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகங்கள், திருப்பணிகள், நிலங்கள், குத்தகை உள்ளிட்ட பொருண்மைகள் பரிசீலிக்கப்பட்டு ஆணையர் அளவிலும், அரசு அளவிலும் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இவ்வாறான கோப்புகள் பதிவறையில் பாதுகாத்து வரப்படுகின்றன.

ஆன்லைனில் ஏற்றப்படும்
நீண்டகால கோப்புகளை பேணி பாதுகாத்திடும் பொருட்டு டிஜிட்டல் முறையில் படி எடுத்து கோப்பாக பாதுகாப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான ஒன்றாகும். இத்திட்டத்தில் கீழ் நிலையான முடிவு கோப்புகள் உள்ளிட்ட கோப்புகளையும், பதிவேடுகளையும் டிஜிட்டல் முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாக்கும் பணிக்கான திட்டம் இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழமையான கோப்புகள் காலப்போக்கில் சிதிலமடையாத வகையில் பேணிகாக்க முடியும். இம்முறையில் இத்துறையின் சார்நிலை அலுவலகங்களில் உள்ள நீண்ட கால கோப்புகளையும் பேணி பாதுகாத்திட படிப்படியாக இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆறு மாதத்தில் முடியும்
இதனிடையே இந்த நிகழ்வைத் தொடங்கிவைத்த சேகர்பாபு பின் செய்தியாளர்களிடம் பேசும் போது , "அழிவிலிருந்து பழைமையான ஆவணங்களைப் பாதுகாக்க இந்த டிஜிட்டல் முறை படியெடுப்பைத் தொடங்கி உள்ளோம். இந்தப் பணி ஆறு மாதங்களில் முழுமையாக முடிக்கப்படும். அதன்பின் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் செயலிகளின் மூலம் அவற்றைக் காணலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications