நீங்க பார்த்துட்டு தானே இருக்கீங்க.. இதுக்கு மேல நான் வெளிய சொல்ல கூடாது.. சீறிய சசிகலா..என்னாச்சு?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வர உள்ள நிலையில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை சந்திப்பீர்களா என்ற கேள்வி சசிகலாவிடம் இன்று கேட்கப்பட்டது. இதற்கு சசிகலா கொஞ்சம் காட்டமாக பதில் அளித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார்.
இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக என்ன செய்யும்? கட்சி மீண்டும் ஒன்று சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு இன்று செய்தியாளர் சந்திப்பில் சசிகலா பதில் அளித்தார்.

சசிகலா
சசிகலா தனது பேட்டியில், அம்மா இருந்த போதும் நான் பார்த்து இருக்கிறேன்... ஆளுநர் உரை தயாரித்து முடித்ததும் அதை ஆளுநருக்கு அனுப்புவார்கள். அதில் ஏதாவது திருத்தம் இருந்தால் அதை திருப்பி அனுப்புவார்கள். அதன்பின் மீண்டும் அதை அனுப்ப வேண்டும். அது பார்த்து வந்ததும்தான் பிரிண்ட் செய்து புத்தகமாக வழங்குவார்கள். இதில் இவர்கள் ஒருமுறை அனுப்பினார்களா இரண்டு முறை அனுப்பினார்களா என்று தெரியவில்லை. அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கருத்து சொல்லவில்லை
அதனால் அதில் உள்ளே போய் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆளுநர் எப்படி செயல்படுகிறாரோ அப்படித்தான் நாம் செயல்பட முடியும். எந்த ஆளுநராக இருந்தாலும் சரி.. எந்த மாநிலமாக இருந்தாலும் சரி. அவங்களை எப்படி நடத்த வேண்டும் என்று முறை உள்ளது. அது படி தமிழ்நாடு அரசும் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஆளுநரின் பதிலும் நன்றாகத்தானே இருக்கும். இதை வைத்துக்கொண்டு சண்டை செய்வது, அரசியல் செய்வது சரியாக தெரியவில்லை.

வெற்றிபெற வேண்டும்
மக்கள் இவர்களை வெற்றிபெற வைத்து உள்ளனர். மக்கள் வாக்குகளால் இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர். மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்க கூடாது. அப்படி செய்தால் மக்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் சில விஷயங்கள் சகித்துக்கொள்ள வேண்டும். ஒரு தேர்தல்.. ஒரு நாடு என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது. இந்தியா முழுக்க இருக்கும் கட்சிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள். அதில் யார் மெஜாரிட்டி முடிவு எடுக்கிறார்கள். அதை வைத்துதான் முடிவு எடுக்க முடியும். ஒரு மாநிலத்தில் உள்ள கட்சிகள் எடுக்கும் முடிவை வைத்து கருத்து சொல்ல முடியாது. தனிப்பட்ட ஒருவர், தனிப்பட்ட ஒரு கட்சி எடுக்கும் முடிவை வைத்து கருத்து சொல்ல முடியாது, என்று சசிகலா கூறினார்.

ஓபிஎஸ் - இபிஎஸ்
இதையடுத்து ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை சந்திப்பீர்களா என்ற கேள்வி சசிகலாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சசிகலா, ஆரம்பத்தில இருந்து என்னோட உத்தியை பார்த்துட்டு இருக்கீங்க; இதுக்கு மேல நான் வெளிய சொல்ல கூடாது. என்ன நடக்கும் என்று உங்களுக்கே வரும் நாட்களில் தெரியும், என்றார். இதையடுத்து.. ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை சந்திப்பதில் உங்களுக்கு பிரச்சனை இல்லையா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு கோபமா பதில் அளித்த சசிகலா.. என்னங்க இது.. என்னுடைய கட்சிக்காரர்களை நான் சந்திப்பதில் என்னங்க இருக்கிறது. இதில் என்ன இருக்க முடியும். உங்க கிட்ட சொல்லிவிட்டு வேண்டுமானால் நான் முடிவு எடுக்கிறேன், என்று சசிகலா கூறினார்.












Click it and Unblock the Notifications