"கதை முடிந்துவிடும்" சிறுபான்மை தவெக ஆட்சிக்கு பிரஷர்.. திமுகவால் வரப்போகும் திருப்பம்: தராசு ஷ்யாம்
சென்னை: தமிழக அரசியலில் தவெக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து இப்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் அணுகுமுறை, கட்சியினரின் செயல்பாடுகள் என பல விஷயங்கள் விவாதமாகி வருகின்றன. இந்த நிலையில், தவெக ஆட்சி, விஜய்யின் அரசியல் பாணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
அரசியல் திறனாய்வாளரும், வழக்கறிருமான தராசு ஷ்யாம் பிரபல சேனல் ஒன்றில் பேசும்போது, "ஒரு அரசு நிலையான அரசாக இருக்கிறதா என்பதைவிட, மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய அரசாக இருக்க வேண்டும். மக்களுக்குப் பணியாற்றுவதுதான் ஓர் அரசின் கடமை. அது திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும், தவெகவாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும்தான் பணியாற்ற வேண்டும்.

காவிரி நீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டின் நலனை முதன்மையாக வைத்துத்தான் செயல்பட வேண்டும். முதலில் தலைவரே தன்னை சரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். தலைவர் எப்படி இருக்கிறாரோ, அப்படித்தான் தொண்டர்களும் இருப்பார்கள்.
தலைவர் வழியே தொண்டர்களும்
இங்கே பாலியல் புகார்கள் மட்டுமல்லாமல், துணை சபாநாயகரைத் தாக்கியதாகவும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. தனக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தாக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். துணை சபாநாயகர் என்பவர் முக்கியமான பொறுப்பில் இருப்பவர். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றாலும் அதற்கான நடைமுறைகள் இருக்கின்றன.
பறக்கும் முத்தம்
தவெக அரசு சிறுபான்மை அரசாக இருக்கிறது. ஒவ்வொரு எம்எல்ஏவையும் இழந்துகொண்டே சென்றால் ஆட்சியின் நிலைமை என்னவாகும்? கதை முடிந்துவிடும். பதவிக்கு வந்த பிறகு அதற்கேற்ற பணிவும் பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். எம்ஜிஆரின் பாடல் வரிகளில்கூட, "பதவி வரும்போது பணிவு வர வேண்டும்" என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இங்கே பணிவே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் விஜய் மிகவும் ஆடம்பரமாக செயல்படுகிறார். அவருடைய நடவடிக்கைகளே சினிமாத்தனமாக இருக்கின்றன. கூட்டத்தைப் பார்த்து காதல் சின்னம் காட்டுவது, பறக்கும் முத்தம் கொடுப்பது போன்ற செயல்களை எந்த முதலமைச்சராவது செய்வார்களா? அதிகபட்சமாகக் கையை அசைப்பார்கள், வணக்கம் சொல்வார்கள். அதுதான் இயல்பான நடைமுறை.
தவெக சிறுபான்மை அரசு
சினிமா நட்சத்திரங்கள் இதுபோன்று செய்யலாம். ஆனால், முதலமைச்சர் அப்படிச் செயல்படுவது சரியானதா? அவர் இன்னும் தன்னை ஒரு சினிமா ஸ்டாராகவும், இளைஞராகவும் மட்டுமே நினைத்துக்கொள்கிறார். ஆனால், அவர் இளைஞர்களுக்கு மட்டும்தானா முதலமைச்சர்? எல்லாத் தரப்பு மக்களுக்கும் சேர்த்துத்தானே முதலமைச்சர்? அனைவருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
எம்ஜிஆர் பாடல்கள்
இப்படிப்பட்ட செயல்களைப் பார்த்து கட்சியினரும் இதுதான் அரசியல் நடைமுறை என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். விமர்சனம் செய்பவர்களை பழைய தலைமுறையினர் என்றும், அவர்களுடைய சிந்தனை பழையது என்றும் சொல்கிறார்கள்.. அப்படியென்றால், எம்ஜிஆர் பாடல்கள் பழைய காலத்தை சேர்ந்தவை என்பதற்காக அவற்றை புறக்கணித்துவிட வேண்டுமா? இன்றைய மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா?
நான் ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் சொல்லி வருகிறேன். இது ஒரு கட்சியை போல இல்லாமல், ஒரு சினிமா காட்சியைப் போலவும், சினிமாத்தனமான மேடையைப் போலவும்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்பாடுகள் இருக்கும்போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இறுதியில் தேசிய அளவில் அவமானம்தான் மிஞ்சும்.
ஆட்சியை இழந்துவிடுமா
அதேபோல், தவெக 6 மாதங்களிலேயே ஆட்சியை இழந்துவிடும் என்று திமுக சொல்வதை நான் ஏற்கவில்லை. ஓர் ஆட்சிக்கு காலக்கெடு விதிக்க வேண்டியவர்கள் மக்கள்தான். மக்கள் தங்களுடைய அதிருப்தியை தேர்தல் நேரத்தில்தான் வெளிப்படுத்துவார்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், அதற்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகளுக்குள் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. பொன்முடி போன்ற மூத்த தலைவர்கள் மக்களைப் பார்த்து "ஓசி பஸ்" என்று பேசினால் மக்களுக்கு வெறுப்பு வரத்தானே செய்யும்? இதுபோல பல விஷயங்கள் நடந்திருக்கின்றன.
சிவில் நீதிமன்ற அவமதிப்பு?
மக்களுக்கு அதிருப்தி ஏற்பட ஒன்றரை ஆண்டுகள் போதும். தவெக ஆட்சியில் இருந்தால் ஆறு மாதங்களே போதுமானதாக இருக்கும். திமுகவுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. தவெகவுக்கு ஆறு மாதங்களே போதும்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லையென்றால், அதிகபட்சமாக சிவில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைதான் எடுக்க முடியும். நீதிமன்ற அவமதிப்பு என்பது சிவில், கிரிமினல் என இரண்டு வகைப்படும். கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு மிகவும் தீவிரமானது. சிவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதற்குரிய தண்டனையைத்தான் வழங்க முடியும். இதைத் தவிர வேறு என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
