சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலாவுக்கு என்னாச்சு.. திடீரென ஐசியூவில் அட்மிட்! நடந்தது என்ன?
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொச்சி: இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக கொச்சினில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் அவரது 3 தம்பிகளில் ஒரு தம்பியாக நடித்திருப்பார் நடிகர் பாலா. இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியாவார். கடந்த 2003 ஆம் ஆண்டு அன்பு என்ற படத்தின் மூலம் பாலா தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பாடகி அம்ருதாவை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பாலா விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் உள்ளார்.

ரகசிய திருமணம்
இதையடுத்து 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அது போல் பாலா, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆயினும் இவருக்கு தமிழில் வரவேற்பு இல்லை. இந்த நிலையில் நடிகர் பாலாவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

தனியார் மருத்துவமனை
இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. அவருக்கு கடந்த சில நாட்களாக உணவு சாப்பிடுவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கல்லீரலில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.

தீவிர சிகிச்சை பிரிவு
பாலாவை அவரது தாய், மனைவி உள்ளிட்டோர் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவை மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் பாதுஷா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் பாதுஷாா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது : நடிகர் பாலாவை உன்னி முகுந்தன், நான், விஷ்ணு மோகன், ஸ்வராஜ், விபின் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்தோம்.

பாலா நலம்
பாலா நலமாக இருக்கிறார். அவர் எல்லோரிடமும் நன்றாக பேசினார். தற்போது அவரது உடல்நிலையில் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. அவரது சகோதரர் சிறுத்தை சிவா சென்னையில் இருந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பாலாவின் உடல் நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை மருத்துவர்கள் வெளியிடுவர் என கூறியுள்ளார். கடந்த ஆண்டு பாலாவுக்கும் உன்னி முகுந்தனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பாலா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே இந்த மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகிவிட்டாராம்.












Click it and Unblock the Notifications