மோதிரத்தை அருக்காணியின் விரலில் இருந்து கோபாலு உருவியதுமே.. கடைசியில் கோவையில் என்னாச்சு தெரியுமா
கோவை: தங்க நகைகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது.. ஒவ்வொரு நாளும் இரண்டு முறை தங்கம் விலையில் மாற்றம் தென்படும் அளவுக்கு நிலைமை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களால் தங்கத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலைமை வந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் அரும்பாடு பட்டு சேமித்து வைத்திருக்கும் தங்க நகைகளையும் அபகரித்தும், கொள்ளையடித்தும் விடுவது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இதோ இந்த கோவை சம்பவமும் அப்படித்தான்,
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ளது வளையபாளையம்.. இங்கு வசித்து வருபவர் அருக்காணி அம்மாள்.. இவருக்கு 80 வயதாகிறது. கணவர் பெயர் கருப்பசாமி.. இந்த தம்பதிக்கு 3 மகள்களும் , ஒரு மகனும் உள்ளனர்.. அனைவருக்குமே திருமணமாகிவிட்டது. அனைவருமே அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்..

சமையல் செய்து எடுத்து வந்த மகள்
உடல்நலக்குறைவால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருப்பசாமி இறந்துவிட்டார். இதனால் அருக்காணி அம்மாள், மட்டும் வளையபாளையம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகள் சாந்தாமணி பக்கத்து ஊரில் இருப்பதால், தினந்தோறும் வந்து தன்னுடைய அம்மாவை பார்த்து விட்டு செல்வார்.. அப்போது வரும்போது அம்மாவுக்காக சமையலும் செய்து எடுத்து வந்து தருவார்.
அப்படித்தான் நேற்றைய தினமும் வீட்டுக்கு வந்துள்ளார்.. அப்போது அருக்காணி அம்மாள் கட்டிலில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறியிருக்கிறார்.. அப்போது அவரது கையில் இருந்த 1 பவுன் மோதிரமும் மாயமாகி இருந்தது.
பக்கத்து வீட்டு கோபாலன்
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து விசாரணையை துவங்கினர்.. தனிமையில் அருக்காணி வசித்து வருவதை நன்றாக தெரிந்தவர்கள்தான் வீட்டுக்குள் நுழைந்து, மோதிரத்துக்காக கொலை செய்துவிட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
அப்போதுதான் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபாலன் (65) என்பவரின் பெயர் அடிபட்டது.. சம்பவத்தன்று இரவு அருக்காணி அம்மாள் வீட்டிலிருந்து அவர் ஓடுவதை சிலர் பார்த்ததாக போலீசாரிடம் சொன்னார்கள்.. இதையடுத்து போலீசாரும் கோபாலனை அவரை பிடித்து விசாரித்ததில், அருக்காணியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
விரலில் தங்க மோதிரம்
போலீசாரிடம் கோபாலன் சொல்லும்போது, "என்னுடைய மகள் வீட்டில் வசித்து வருகிறேன்.. எனக்கு வேலை எதுவும் இல்லை.. எனவே செலவுக்கு பணம் தேவையாக இருந்தது.. அப்போதுதான் அருக்காணி அம்மாள் விரலில் தங்க மோதிரம் அணிந்திருப்பது நினைவுக்கு வந்தது.
வழக்கமாக அருக்காணி அம்மாள் வீட்டுக்கு சென்று அடிக்கடி பேசிக் கொண்டிருப்பேன்.. நேற்று முன்தினம் இரவும், வழக்கம் போல் அவருடன் சென்று பேசிக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென அவரை கீழே தள்ளிவிட்டு அவரது விரலில் இருந்த மோதிரத்தை கழற்ற முயன்றேன்.
அப்போது அருக்காணி அம்மாள் அலறி சத்தம்போட்டார். என்னை காட்டி கொடுத்துவிடுவாரோ என்று பயத்தில் அவரது கழுத்தை துண்டால் இறுக்கி கொன்றுவிட்டு, மோதிரத்தை கழட்டி வந்துவிட்டேன்.. அருக்காணி அம்மாள் இறந்துவிட்ட அதிர்ச்சியில், மோதிரத்தை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைதேன்.
ஒரே மணி நேரத்தில் அதிரடி
மோதிரத்தை திருடி வந்தபோது அக்கம்பக்கத்தினர் பார்த்துவிடுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றார்.. இதனையடுத்து அருக்காணி அம்மாளின் மோதிரத்தை பறிமுதல் செய்த போலீசார் கோபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அருக்காணி அம்மாள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஸ்பாட்டுக்கு வந்து, விசாரணையை மேற்கொண்டு, கொலையாளியையும் போலீசார் கைது செய்துவிட்டார்கள்..!












Click it and Unblock the Notifications