வேற லெவலில் 37 தமிழக கிராமப் பஞ்சாயத்துகள்! கேரள கிராமம் தான் ரோல் மாடல்! மாற்றி யோசித்த தலைவர்கள்!
கோவை: கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை முன் மாதிரியாக கொண்டு தமிழகத்தில் 37 கிராமப் பஞ்சாயத்துக்களில் சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்வற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கவுள்ளன.
மின் கட்டணம் உயர்வு, மின் தடை என எந்தவித இடையூறும், கவலையும் இல்லாமல் விவசாயிகளும், கிராம மக்களும் நிம்மதி கொள்ளும் வகையில் இந்த திட்டம் தமிழக கிராமப் பஞ்சாயத்துக்களில் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.

கேரள மாநிலம்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பெரிஞ்சனம் என்ற கிராமத்தில் வீட்டுக்கு வீடு சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு அது வீட்டு உபயோகம் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு பெரின்ஜனம் கிராமப் பஞ்சாயத்து சார்பில் சிறியளவில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது இன்று நாட்டிற்கே முன் மாதிரியாக திகழும் வகையில் உயர்ந்துள்ளது. 800 ரூபாய் வரை மின் கட்டணம் கட்டியவர்கள் மேற்கூரை சூரிய மின் சக்தி திட்டம் மூலம் தற்போது 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்துகிறார்கள்.

தமிழக குழு
தமிழகத்திலிருந்து 37 ஊராட்சி மன்றத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட 45 பேர் கொண்ட குழுவானது திருச்சூர் மாவட்டம் பெரின்ஜனம் கிராமத்துக்கு சென்று அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மேற்கூரை சூரிய மின் சக்தி திட்டம் குறித்து ஆய்வு செய்தது. மின் கட்டணம் உயர்வு, மின் தடை என எந்தவித இடையூறும், கவலையும் இல்லாமல் விவசாயிகளும், மக்களும் மின் பயன்பாட்டை பெறலாம் என்பதால் அந்தக் குழு இந்த திட்டத்தை தமிழகத்தில் தங்கள் கிராமப் பஞ்சாயத்துக்களில் நடைமுறைப்படுத்த ஆவலாக உள்ளது.

மாற்றி யோசி
காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம் என்பதை உணர்ந்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதனிடையே கேரள கிராமத்தை போலவே தங்கள் ஊராட்சிகளிலும் சோலார் பேனல் அமைக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொடுக்கவும் அந்தக் குழு தயாராக உள்ளது. இதனால் தமிழகத்தின் 37 கிராமப் பஞ்சாயத்துக்களில் விரைவில் மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தன்னிறைவு அடையும் நிலை உருவாகும்.

தன்னிறைவு பெற்ற கிராமம்
மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தன்னிறைவு பெற்ற கிராமமாக திகழும் பெரிஞ்சனம் கிராமத்தில் இருந்து 1.16 Mw மின்சாரம் கேரள மின்சார வாரியத்துக்கு அளிக்கப்படுகிறது. இதனிடையே இந்த ஆய்வின் போது தமிழக கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை பஞ்சயத்து தலைவர் தங்கவேல், பெரின் ஜனம் மாடலை தனது கிராமத்தில் நடைமுறைப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்த ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர்களை பாராட்டினார்.












Click it and Unblock the Notifications