100 சவரன் நகை, சொகுசு கார் கொடுத்தும்.. வரதட்சணை கொடுமை.. உயிரைவிட்ட கோவை பெண்
கோவை : கோவையில் வரதட்சணையாக 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி, சொகுசு கார், இருசக்கர வாகனம் கொடுத்தும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் நடந்த ஒரே வருடத்தில் இளம் பெண் இறந்ததால் வருவாய் கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
Recommended Video
கோடிகளில் லட்சங்களில் எளிதாக பணம் சம்பாதிக்கும் பெற்றோருக்கு, தங்களது பெண் குழந்தைகளுக்கு சரியான மாப்பிள்ளையை தேடுவது சவாலாக விஷயம். ஏனெனில் சரியான நபரை தேர்நதெடுக்காவிட்டால் தங்களது குழந்தையை புதை குழியில் தள்ளுவதற்கு சமம் ஆகும்.
காதல் திருமணம் என்றாலும் சரியான புரிதல் விட்டுக்கொடுத்து போகும் தன்மை, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும். ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று இல்லாமல் வாழ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். மனைவிக்காக கணவனும், கணவனுக்காக மனைவியும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். காசுக்கு ஆசைப்பட்டு காதலித்தோ அல்லது பெற்றொர் பார்த்தோ கல்யாணம் செய்தால் கல்லறை வரை நிம்மதி இருக்காது என்பதே நிதர்சனம்.

மே மாதம் திருமணம்
சரி விஷயத்திற்கு வருவோம். கோவையில் வரதட்சணையாக 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி, சொகுசு கார், இருசக்கர வாகனம் கொடுத்தும் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் உயிரை விட்டுள்ளார். கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பிரசாத்- இலக்கியா தம்பதியினர். கடந்த 2020 மே மாதம் இருவருக்கும் திருமணமானது. திருமணத்திற்கு வரதட்சணையாக 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி, சொகுசு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பெற்றதாக கூறப்படுகிறது.

தற்கொலை
மேலும் பணம் கேட்டு இலக்கியாவுடன் ராம்பிரசாந்த் மற்றும் அவரது பெற்றோர்கள் கொடுமைப்படுத்தியாக இலக்கியா அடிக்கடி பெற்றோரிடம் கூறி உள்ளார். இந்நிலையில் நேற்று இலக்கியா தற்கொலை செய்து கொண்டதாக ராம்பிரசாத் இலக்கியாவின் வீட்டார்க்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.

சந்தேகம்
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இலக்கியா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக இலக்கியாவின் தந்தை அண்ணாதுரை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவையில் கொடுமை
திருமணமாகி ஒரே ஆண்டில் வரதட்சணை கொடுமை விவகாரத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தினால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்வது உண்மையில் கோழைத்தனம். தற்கொலை மனநிலை தயவு செய்து வேண்டாம். தற்கொலை செய்யும் மனநிலை இருந்தால் தயவு செய்து 104க்கு அழையுங்கள். அல்லது 9152987821 என்ற எண்ணில் அழையுங்கள். உங்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும்.











Click it and Unblock the Notifications