8 ஆண்டுகளுக்கு பிறகு மைக் பிடித்த திமுக மாஜி அமைச்சர் மகன்! கோவை திமுகவில் நடந்த புது டிவிஸ்ட்!
கோவை: கோவையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி மத்திய பாஜக அரசை வெளுத்து வாங்கிவிட்டார்.
திமுகவில் புது நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கட்சிக் கூட்டத்தில் மைக் பிடித்து பேசிய அவர் எடுத்த எடுப்பிலேயே பாஜகவுக்கு எதிராக சிக்ஸர் விளாசினார்.
பைந்தமிழ் பாரியை பொறுத்தவரை தற்போது திமுக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளராக இருக்கிறார்.

கோவை மாவட்ட திமுக
கோவை மாவட்ட திமுகவின் முக்கிய முகமாக திகழ்ந்த பைந்தமிழ் பாரி கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்து மாநில அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். திமுக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து பயணித்து வரும் அவர் டெல்டா மண்டல இளைஞரணி பொறுப்பாளராகவும் கட்சிப்பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கோவையில் பல ஆண்டுகளுக்கு பிறகு கட்சிக்கூட்டத்தில் மைக் பிடித்து பேசிய பைந்தமிழ் பாரி, மத்திய பாஜக அரசை வெளுத்து வாங்கிவிட்டார்.

தமிழ் மொழி
தாய்மொழிக்கு ஒரு சோதனை என்றால் அதை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் மொழியையும், மதத்தையும் விட்டால் பாஜகவுக்கு அரசியல் செய்ய வேறு எதுவுமே இல்லை எனவும் சாடினார். வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உள்ளிட்டவைகள் பற்றியெல்லாம் ஒரு நாளாவது பாஜக பேசியது உண்டா என வினவிய அவர் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி நினைவுகூர்ந்தார். கோவையில் நாளுக்கு நாள் இந்திக்காரர்கள் அதிகம் குடியேறி வரும் நிலையில் அவரது பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

பைந்தமிழ் பாரி
கோவை மாநகர் மாவட்டம் இதுவரை இரண்டாக இருந்த நிலையில் தற்போது ஒன்றாக்கப்பட்டு அதற்கு சிங்காநல்லூர் கார்த்திக் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கார்த்திக்கை பொறுத்தவரை பொங்கலூர் பழனிசாமியால் ஆரம்பக்காலங்களில் கட்சியில் வளர்த்து விடப்பட்டவர். அதன் பிறகு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், இப்போது முக்கியப் பொறுப்புக்கு வந்திருப்பதால் பக்குவம் அடைந்திருக்கிறார் கார்த்திக். . இந்நிலையில் முறைப்படி அவர் விடுத்த அழைப்பை ஏற்று மிகுந்த உற்சாகத்துடன் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பாஜகவை கடுமையாக சாடியுள்ளார் பைந்தமிழ் பாரி.

மாவட்ட அரசியல்
திமுகவில் மாநில அளவிலான பொறுப்பில் இருந்து வரும் பைந்தமிழ் பாரி, தற்போது மீண்டும் மாவட்ட அரசியல் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது கட்சியினரிடையே பேசு பொருளாக உள்ளது. இதனிடையே கார்த்திக்கிற்கு கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படும் போதே, கட்சியின் சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை அணுசரித்துச் செல்ல வேண்டும் என்பது தலைமை வழங்கிய அறிவுறுத்தலாகும்.












Click it and Unblock the Notifications