வெள்ளியங்கிரி மலையேற போறீங்களா? இதுதான் கோவை ரூட்.. "இவங்க" மட்டும் டாக்டரை பாருங்க.. திடீர் உத்தரவு
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள். இது கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு 5.5 கி.மீ மலைப்பாதையில் செல்ல வேண்டும்.
மலைக்கோயில்: இந்த மலைக்கோயிலுக்கு, கடினமான கரடு முரடான மலைப்பாதையில் ஏழு மலைகளைக் கடந்து நடந்துதான் செல்ல வேண்டும். எப்போதுமே மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் இங்கு சென்று வர பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.. தினமும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனால், வெள்ளியங்கிரி மலையில், ஏறி வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள், மருத்துவ உதவி, பாதுகாப்பு போன்றவை இல்லாததால், மலை ஏறும் பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.. ஒருபக்கம் அடிப்படை வசதி இல்லாததுடன், மறுபக்கம், பக்தர்களால் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து சுற்றுச்சூழலுக்கு கெடுதலை தருவதாகவும் சொல்லப்படுகிறது.
வெள்ளியங்கிரி: அதனால்தான், வெள்ளியங்கிரி வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், காலி தண்ணீர் பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதை தடுக்க வேண்டும் என்று அவ்வப்போது கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் அநியாயமாக உயிரிழந்துவிட்டனர்.
தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த வருடம், சித்ரா பவுர்ணமி நாளைய தினம் வருகிறது..
அறிவுறுத்தல்: அதனால், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இப்போதே வர தொடங்கி உள்ளனர். இதையடுத்து வனத்துறை பக்தர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
- வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது.
- பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வனத்திற்குள் போடக்கூடாது.
- மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. வனப்பகுதிக்குள் எங்கும் தீ முட்டக்கூடாது.
- வெள்ளியங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்து விட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதில் மூத்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும் போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
- உயிரிழப்புகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கும் கடும் சவாலாக உள்ளது. மேலும் அனைவரின் நலன் கருதி மேற்கண்ட அறிவுரைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications