கோவில்களை இடிப்பதுதான் திராவிட மாடலா? மோடிதான் தமிழர்களின் நண்பன்.. அண்ணாமலையை பாராட்டிய பாஜக தலைவர்
கோவை : கோவில்களை இடிப்பது தான் திராவிட மாடலா என இன்று கோவை வந்த பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அராஜக செயலில் ஈடுபடுகிறது. அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் தைரியம் பாஜகவிற்கு உள்ளது. இதை அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக சிறப்பாக செய்து வருகிறது என சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஊழல் இல்லாத ஆட்சியாக பாஜக உள்ளது என்றும் இதுவே நாட்டின் பெருமையை உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவை வந்த சுதாகர் ரெட்டி
கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை பா.ஜ.கவின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சந்தித்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சுதாகர் ரெட்டி, "பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிகரமாக 8 வருடத்தை கடந்துள்ளது. இதில் பாஜகவின் சாதனையை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

தேசம் கண்டிராத சிறந்த பிரதமர்
இலவச காஸ் சிலிண்டர், இலவச கழிப்பறைகள், ஆவாஸ் யோஜனா, கொரோனா காலத்தில் இலவச அரிசி வழங்கிய திட்டம், முத்ரா திட்டம், சாலை வியாபாரிகளுக்கான கடன் திட்டம் என கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை தேசம் கண்டிராத சிறந்த பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். இவரைப் போல அதிகப்படியான மக்கள் நலத்திட்டங்களை எந்த பிரதமரும் கொண்டு வந்தது இல்லை.

தேச பாதுகாப்பு
மோடி தலைமையிலான அரசு பாதுகாப்பு படையை பலப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் தாக்குதல்களை தடுத்துள்ளோம். காஷ்மீரில் அமைதியைக் கொண்டு வந்துள்ளோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வகையில் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாஜக சேவை அமைப்பாக கொரோனா காலத்தில் செயல்பட்டது.

குடும்பக்கட்சி திமுக
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள திமுக அரசு விலையை குறைக்காமல் வெறுமனே குற்றம்சாட்டி மட்டும் வருகிறது. திமுக ஒரு குடும்ப கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஒரு சேவை கட்சியாக உள்ளது. அதேபோல் திமுக அரசு ஆளுநருக்கு மரியாதை கொடுக்காத செயலில் ஈடுபடுகிறது. நீட் மசோதா, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் ஆளுநருக்கான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கோவில்களை இடிப்பது தான் திராவிட மாடலா?

அண்ணாமலைக்கு பாராட்டு
திமுக அரசு தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினார்கள் என தெரியவில்லை. குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாகக் திமுக தெரிவித்தது. கூலிப்படை ரவுடியிசம் அதிகரித்துள்ளது. திமுக அரசு காவல்துறையினரை தவறாக பயன்படுத்தும் அரசாக உள்ளது. திமுக அராஜக செயலில் ஈடுபடுகிறது. அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் தைரியம் பாஜகவிற்கு உள்ளது. இதை அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக சிறப்பாக செய்து வருகிறது.

மோடி தமிழ்நாட்டுக்கு நண்பர்
மோடி திட்டத்தை பிரச்சாரம் செய்வது போல திமுகவின் அராஜகத்தையும் வெளிப்படுத்துகிறோம். மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக உள்ளார். தமிழை முன்னிறுத்தி எங்கும் பேசுகிறார். மக்களுடைய பார்வைக்கு திமுக நல்ல கட்சியாக இல்லை. ஊழல் இல்லாத ஆட்சியாக பாஜக உள்ளது. இதுவே நாட்டின் பெருமையை உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications