அமைச்சர்களுக்கு தான் மாற்றம்.. மக்களுக்கு ஏமாற்றம்.. முதல்வருக்கு வானதி பதிலடி
கோவை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றம்தான் இருக்கும் என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு சேர்க்கைக்கான அட்டையை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில்,பிரதமர் மோடி பா.ஜ.க.வில் பொதுமக்கள் அனைவரும் இணையுமாறு வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் நான்கு கோடி உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர். தொகுதியில் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் பூத் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பூத்களில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வீடு, வீடாகச் சென்று உறுப்பினர்கள் சேர்க்கை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கட்சியில் அதிக அளவில் பெண்கள் சேர்ந்து இருப்பது மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. வரக் கூடிய நாட்களில் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெறும். முதன்முதலில் தொழில் நுட்ப அரசியல் கட்சியாக செயல்படுவது பா.ஜ.க.தான்.
ஜிஎஸ்டி தொடர்பாக குழு அமைக்கப்பட்டு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்து விரைவில் மத்திய அரசு அறிவிக்கும். மத்திய, மாநில அரசு சேர்ந்துதான் ஜி.எஸ்.டி. குறித்து முடிவு எடுக்கிறார்கள். இது தொடர்பாக மாநில நிதி அமைச்சர் சந்தித்துள்ளதாகக் கூறினார். விவசாயம் மற்றும் கோவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சந்திக்க உள்ளேன்.
குடும்ப அட்டையில் போலியாக நபர்களைச் சேர்ப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஏழைகளுக்காக வழங்கப்படும் ரேஷன் அட்டை குறித்து மாநில அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்கவுண்டர் செய்தால் பொதுமக்களை சமாதானம் செய்ய முடியும் என்று தி.மு.க அரசாங்கம் செய்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடியை காங்கிரஸ் குறை கூறி வருகிறது. ஆனால், தமிழக மக்கள் மீது நலன் இல்லாமல் மத்திய அரசை மட்டுமே குறை கூறி வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம், ஆனால் ஏமாற்றம் பொதுமக்களுக்குதான் இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பை தாராளமாக மாநில அரசு நடத்தலாம். ஆனால், மத்திய அரசை குறை சொல்கிறார்கள். மத்திய கல்விக் கொள்கையை மட்டும் மாநில அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூறுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.
பெண்களுக்கு எதிராக மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தி.மு.க. அரசு கண்டும் காணாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால், சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவு போட்டால் அவர்களை உடனடியாகக் கைது செய்கிறார்கள். மத்திய அரசு கொடுக்கின்ற நிதிகளை மாநில அரசு திரும்பி அனுப்புகிறது.
ஆனால், மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று தொடர்ச்சியாக தி.மு.க. அரசு கோரிக்கை வைத்து வருகிறது. நொய்யல் ஆற்றில் நேரடியாக மனித கழிவுகள் கலந்து வருகின்றன. இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications