சீரியசா பேசிக்கிட்டு இருக்கும் போது! ஏங்க கம்முனு இருங்க.. பொசுக்குனு கோபப்பட்ட அண்ணாமலை! என்னாச்சு?
கோவை : ரபேல் வாட்ச் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திடீரென தொண்டர்களை பார்த்து கம்முனு இருங்க என கோபப்பட்டார். என்ன ஆனது? ஏன் அப்படி பேசினார்?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பிரச்சினை தான் தமிழகத்தின் ஹாட் டாஃபிக். 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? என திமுகவினர் கேள்வி கணைகளை தொடுத்து வருகின்றனர்.
ரபேஃல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. அது ஒரு கலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன். இந்த வாட்சோட பெயரே, ரபேஃல் ஸ்பெஷல் எடிஷன் என அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார்.

அண்ணாமலை
இருந்தாலும் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேட்டிக்குப் பின் இந்த விவகாரம் மேலும் பெரிதானது. திமுக மாணவரணியைச் சேர்ந்த ராஜீவ் காந்தியும் இந்த விவகாரத்தில் அண்ணாமலை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் திமுக ஐடி விங் சார்பில் இன்று பல ஆதாரங்களுடன் ட்விட்டரில் பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

செந்தில் பாலாஜி
தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,"நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான். தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின்னரா என்றால் பில்லை காட்ட சொல்லுங்கள்.மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. மடியில் கணம் உள்ளது. நீ முதலில் உண்மையாக இரு" என கெடு விதித்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் இன்று அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர்.

விளக்கம்
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,"இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியில் உள்ள திமுக சாமான்ய மனிதனை பார்த்து பில் கேட்கிறார்கள். இந்த வாட்ச்க்கு பில் மட்டும் இல்லை 13 ஆண்டுகள் சம்பாதித்தது முழுமையும் கணக்கு கொடுக்கிறேன். இதன் விவரங்களை தனி வலைதளத்தில் முழுமையாக வெளியிடுகிறேன். அதே பிரஸ் மீட்டில் திமுக பினாமி அமைச்சர்கள் சொத்து கணக்கையும் வெளியிடுகிறேன். 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து உள்ளனர்" என கூறினார்.

தொண்டர்களிடம் கோபம்
இந்நிலையில் ரபேல் வாட்ச் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திடீரென தொண்டர்களை பார்த்து கம்முனு இருங்க என கோபப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்களின் சொத்து கணக்கை வெளியிடுவேன் என அண்ணாமலை சீரியஸாக பேசிக் கொண்டிருந்தபோது அவரது பின்னால் இருந்த தொண்டர்கள் ஆர்வமிகுதியில் அண்ணாமலை வாழ்க என உற்சாகமாக முழக்கமிட்டனர். இதனால் கடுப்பான அண்ணாமலை 'ஏங்க கம்முனு இருங்க' என கோபமாக பேசிவிட்டு தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசினார். வழக்கமாக செய்தியாளர்களுடன் தான் அண்ணாமலை கோபப்படுவார் இப்போது என்ன நம்மையே கோபப்படுகிறார் என தொண்டர்கள் திடீரென அமைதியாகினர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications