ஆ.ராசாவை கண்டித்து திடீரென திரண்ட பாஜக மகளிர் அணி.. கோவையில் ஆர்ப்பாட்டம்
கோவை: ஆ ராசாவை கண்டித்து கோவை காளப்பட்டி பகுதியில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்துக்கள் ஓட்டு தேவையில்லை என்றால் எம்பி பதவியை இருந்து ராஜினாமா செய்யுங்கள் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி தொகுதி எம்.பி.யாகவும், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராகவும் இருப்பவர் ஆ ராசா. அவ்வப்போது இவரது பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது.
சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே, ''அண்ணா வழியில் முதல்வர் பயணிக்கிறார். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளாதீர்கள். தனிநாடு கேட்க எங்களைத் தூண்ட வேண்டாம். மாநில சுயாட்சி தாருங்கள்'' என்று பேசியிருந்தார்.

இஸ்லாமியனாக இல்லை என்றால்..
ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 6 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் ஆ.ராசா பேசுகையில், ''நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லை என்றால், பார்சியனாக இல்லை என்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக..
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்.. இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்கள்?'' என்ற வகையில் பேசி இருந்தார்.

பாஜகவினர் எதிர்ப்பு
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக மட்டும் அல்லாது பிற முன்னணி அரசியல் கட்சிகளும் ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தன. ஆ.ராசா பேச்சை கண்டித்து இந்து அமைப்பினர், பாஜகவினர் சார்பில் போலீசில் புகாரும் செய்யப்பட்டது. கடும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க ஆ ராசா மறுத்து விட்டார். இதனால், இந்த விவகாரத்தில் சர்ச்சை இன்னமும் ஓய்ந்த பாடில்லை.

ஆ ராசாவை கண்டித்து போராட்டம்
ராசாவின் இந்த கருத்துக்கு எதிராக பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை காளப்பட்டி பகுதியில் ஆ.ராசாவை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக விலைமாது மகன் என மனு தர்மம் கூறியதாக தெரிவித்த ஆ ராசாவை கண்டித்து பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

50-க்கும் மேற்பட்டோர் கைது
ஆர்ப்பாட்டத்தின் போது, ஆ ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்துக்கள் போட்ட ஓட்டுக்கள் வேண்டாம் என்றால் எம்.பி பதவியை ராஜினாமா செய்யுங்கள் எனவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications