ஒரு நாள் ரிமாண்ட்.. ஓம்கார் பாலாஜியை காவலில் எடுத்த கோவை போலீசார்.. ரேஸ் கோர்ஸ் ஸ்டேஷனில் விசாரணை!
கோவை: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதாக ஓம்கார் பாலாஜி மீது வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவையில் உள்ள ஈஷா மையம் குறித்தும், அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் நிலையில் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ஓம்கார் பாலாஜி, நக்கீரன் இதழ் குறித்தும், நக்கீரன் ஆசிரியர் குறித்தும் ஆவேசமாகப் பேசியிருந்தார். நக்கீரன் கோபாலின் நாக்கை அறுத்துவிடுவேன் என்றெல்லாம் ஓம்கார் பாலாஜி பேசி இருந்த நிலையில், அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே தன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யுமாறு ஓம்கார் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஓம்கார் பாலாஜி, புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தாமாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்டார். இதையடுத்து ஐகோர்ட் வளாகத்திலேயே ஓம்கார் பாலாஜி கோவை போலீசாரால், கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவரும், அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜியை 14 நாட்களுக்கு அதாவது வரும் 28 ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார் ஓம்கார் பாலாஜி.
இந்நிலையில், ஓம்கார் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஓம்கார் பாலாஜியை ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், ரேஸ் கோர்ஸ் போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications