கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: ஸ்ட்ரெச்சரில் குற்றவாளிகள்.. 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் 3 நாட்கள் விசாரிக்க காவல்துறை கோரிய நிலையில், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் கடந்த 2 ஆம் தேதி இரவு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோவை விமான நிலையத்துக்கு பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், காரின் கண்ணாடியை உடைத்து கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

பின்னர், அந்த 3 பேரும் கல்லூரி மாணவியை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து எழுந்ததும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முற்புதர் அருகில் அரைகுறை ஆடையுடன் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை பீளமேடு போலீசார் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். சிகிச்சைக்குப் பின் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில், பாதிக்கப்பட்ட மாணவி, காயமடைந்த ஆண் நண்பர் ஆகியோர் தனித்தனியாக மூவரையும் அடையாளம் காட்டினர். மேலும், மூவருக்கும் ஆண்மைப் பரிசோதனை, டி.என்.ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மேற்பார்வையில், துணை ஆணையர் தேவநாதன், ஆய்வாளர்கள் அர்ஜூன் மற்றும் லதா ஆகியோர் அடங்கிய குழுவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட வேண்டிய அனைத்து ஆவணங்களையும் தயார் செய்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் மூன்று நாட்கள் போலீசார் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி காவல்துறையினர் தரப்பில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு, சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரச்சரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிந்து, குற்றவாளிகள் மூவரையும் ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து, கால்களில் சுடப்பட்ட மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரச்சரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications