லீஸ் வீடு பார்க்கிறீங்களா.. கோவை அடுக்குமாடி உரிமையாளர் செய்த தில்லாலங்கடி வேலை.. இதை பாருங்க
கோவை: கோவையில் லீசுக்கு வீடு குடிபோனவர்களை அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் ஏமாற்றி உள்ளார். மொத்தம் ரூ.67 லட்சம் மோசடி செய்த வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஒத்திக்கு அதாவது லீசுக்கு வீடு தேடுவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீடு நன்றாக இருக்கிறது என்பதை மட்டும் பார்த்துவிட்டு குடியேறிவிடக்கூடாது. வீட்டின் உரிமையாளர் பெரிய அளவில் கடனில் உள்ளாரா, லீசுக்கு விடும் வீடு கடனில் இருக்கிறதா? அந்த கடனை அவர் முறையாக செலுத்துகிறாரா என்பதையும் பார்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

அதேபோல் லீஸ் பணத்தை திடீரென கேட்டால் திரும்ப தரக்கூடிய நிலையில் உள்ளாரா அதேபோல் வீடு அவர் பெயரில் தான் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டி உள்ளது. லீசுக்கு குடி செல்வோர் கண்டிப்பாக வாடகை ஒப்பந்த சட்டப்படி அரசின் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம் ஆகும். இல்லாவிட்டால் பணத்தை திரும்ப பெறுவது கடினமாகிவிடும்.. கோவையில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதற்கு உதாரணம் ஆகும்.
கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த 53 வயதாகும் ராமதாஸ், பைனான்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி பொற்செல்வி (49). இவர்களுக்கு கோவை ராம் நகர் பகுதியில் சொந்தமாக அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் 8 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிக்கும் அனைவரும் வீட்டை ஒப்பந்த அடிப்படையில் லீசுக்கு எடுத்து வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பைனான்ஸ் அதிபரான ராமதாஸ், தொழில் விருத்திக்காக கோவை ராம்நகரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் பத்திரத்தை வங்கியில் வைத்து கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. வங்கி கடனுக்கு முறையாக தவணை கட்டாததால் வங்கி அதிகாரிகள் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். இது குறித்து குடியிருப்போர் வீட்டின் உரிமையாளர் ராமதாசிடம் கேட்டிருக்கிறார்கள். மேலும் அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் தாங்கள் கொடுத்த முன்தொகையை (அட்வான்ஸ்) திருப்பி வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள்
ஆனால் அவர் அதை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்திருக்கிறார். குடியிருப்பில் லீசுக்கு உள்ள 6 பேரிடம் அட்வான்ஸ் தொகை ரூ.76 லட்சத்தை ராமதாஸ் வாங்கி கொண்டு மோசடி செய்ததாக கோவை காட்டூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் ராமதாஸ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பொற்செல்வி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே வீடு லீசுக்கு பார்ப்போர்.. அந்த வீட்டின் பெயரில் கடன் உள்ளதா என்பதையும் அறிந்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பணத்தை பெற நீதிமன்றம், போலீஸ் என அலைய வேண்டிய நிலை ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications