வேறு இடத்தில் வெடிக்க வைக்க திட்டம்? கூட்டுசதியில் யார் யாருக்கு கனெக்ஷன்? கோவை ஆணையர் பகீர் தகவல்!
கோவை : கோவை கார் வெடிப்பு கூட்டு சதியில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்? எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பது பற்றி தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடிப்பால். அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை கார் வெடிப்பு சம்பவம் பற்றி ஆலோசனை நடைபெற்றது.
ஜமாத் கூட்டமைப்புகளுடனான சந்திப்பில், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசர கூட்டம்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறை , வருவாய்துறை உயர் அதிகாரிகளும் கோவையில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கூடுதல் போலீசார்
இதனைதொடர்த்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரை பொறுத்தவரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி கூடுதலாக போலீசார் ரோந்து பணியில் இருக்கின்றனர் எனவும், உளவுத்துறையை இன்னும் அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏவுக்கு மாற்றுவது குறித்து முறையான அனுமதிகள் வந்ததும் அதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

200 மீட்டர் தொலைவில்
மேலும், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது. மேலும் அந்த பகுதியில் 200 மீட்டர் தொலைவில் காவல்துறை தடுப்பு இருந்ததால்தான் வாகனம் வேறு இடத்தில் வெடித்துள்ளது என தகவல் வருகிறது. இந்த கூட்டு சதியில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள், எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பது பற்றி தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகிறோம்.

போராட்டங்களுக்கு அனுமதி
விசாரணையின் அடிப்படையில் தகவல்கள் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கும், பொதுமக்களுக்கும் அளிக்கப்படும். கோவை தற்போது அமைதியான பகுதியாகவே உள்ளது. ஜமாத்துகள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினருடன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும். சூழல்களை கருத்தில் கொண்டு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

கேரளா சென்றார்களா?
கேரள சிறையில் உள்ள இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஜமேசா முபின் மற்றும் கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சந்தித்தார்களா என்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களை விசாரித்ததில் ஒரு சிலர் கேரளா சென்று வந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக சென்றார்கள்? எப்போது சென்றார்கள்? என்ற தகவல்களை எல்லாம் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

கிளாரிட்டி
மிக விரைவில் இது பற்றிய முழுமையான தகவல் தெரியவரும். எல்பிஜி சிலிண்டர் மூலமாக கார் வெடித்திருக்கிறது. அதில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பதை அறிய தடயவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஊபா சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் எல்லா கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யூகங்களின் அடிப்படையில் நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. தடயவியல் ரிப்போர்ட் வந்த பிறகு முழுமையான கிளாரிட்டி கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications