காதல் வளர்த்தேன்..நட்டாற்றில் சிக்கிக் கொண்ட காதல் ஜோடி!3 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை அருகே காதலை வளர்க்க நடு ஆற்றில் பேசிக் கொண்டிருக்கும் போது பவானியாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட காதல் ஜோடியை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
Recommended Video
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றும் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில், காலை 102 அடியை எட்டியது.
நேற்று 2 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும் நீர் இருப்பு 30.31 டிஎம்சி ஆகவும் இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 12,338 கன அடியாக உள்ள நிலையில், உபரி நீர் 12,338 கன அடி நீரும், அணையில் உள்ள பதினெட்டு மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக பவானி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் பவானியாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட காதல் ஜோடியை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை விளாமரத்தூர் பகுதிக்கு இன்று காலை காரமடை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முருகேஷ் மகன் பிரதீப், காரமடை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் காயத்ரி (21) ஆகியோர் பொழுது போக்கிற்காக வந்துள்ளனர்.

காதல் ஜோடி
கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்ததாகவும்,இன்று காலை விளாமரத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து பவானி ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் பருவமழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றின் நடுவே இருந்த இருவரையும் வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

3 மணி நேர போராட்டம்
இதனால் அங்கிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் கிராம மக்கள் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச்சென்ற மேட்டுப்பாளையம் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட காதல் ஜோடியை மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர்.

போலீசார் எச்சரிக்கை
பருவமழை காரணமாக அனைத்துப் பகுதிகளிலும் அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் விவேகமற்ற இவர்களது செயல் பொதுமக்களிடம் விமர்சனத்திற்கு உள்ளானது. பலத்த மழை காரணமாக ஆற்றின் கரையோரங்களுக்கே யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், ஆற்றின் நடுவில் சென்று காதல் வளர்த்த காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications