கோவையில் இல்லந்தோறும் இளைஞரணி! அமைச்சர் செந்தில் பாலாஜியின் புதிய வியூகம்! உதயநிதி உற்சாகம்!
கோவை: கோவை மாவட்டத்தில் இல்லந்தோறும் இளைஞரணி என்ற பெயரில் புதிய வியூகம் வகுத்து உதயநிதி ஸ்டாலினை உற்சாகப்படுத்தியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இதில் நேரடி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டத்தில் தான் திமுக இளைஞரணியில் அதிக உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து களமாடி வருகிறார் செந்தில் பாலாஜி.

திமுக இளைஞரணி
திமுகவில் உள்ள இளைஞரணியின் கட்டமைப்பும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் மற்ற அரசியல் கட்சிகளில் இல்லாத ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது. இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்து தற்போது 43ஆம் ஆண்டு நடைபெற்று வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கொரோனா கால நிவாரணப் பணிகள் என பல நிகழ்வுகளில் திமுக இளைஞரணியின் பங்களிப்பை குறைத்துக் கூறிவிட முடியாது.

உதயநிதி ஸ்டாலின்
கிளை, ஒன்றிய, பேரூர், நகரம், மாநகரம், மாவட்டம் என அனைத்து நிலைகளிலும் திமுக இளைஞரணியின் அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார். எள் என்றால் எண்ணெய்யாக நிற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு படி மேலே யோசித்து இல்லந்தோறும் இளைஞரணி என்ற பெயரில் புதிய வியூகம் வகுத்து கோவை மாவட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்களை பெருமளவில் திமுக இளைஞரணி உறுப்பினர்களாக கொண்டு வரும் திட்டத்தில் இதனை செயல்படுத்தியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமைச்சர் செந்தில் பாலாஜி எந்தவொரு பணியை முன்னெடுத்தாலும் அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. அதனால் இளைஞரணிக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கையிலும் தனது பிரம்மாண்டத்தை நிகழ்த்திக் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி உற்சாகம்
திமுக வீக்காக உள்ள கோவை மாவட்டத்தில் இல்லந்தோறும் இளைஞரணி என்ற பெயரில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் செந்தில் பாலாஜியின் களப்பணியை கண்டு உதயநிதி ஸ்டாலின் உற்சாகம் அடைந்திருக்கிறார். இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நூற்றுக்கணக்கான சுபகாரியங்களுக்கு அழைப்பிதழ்கள் வந்துள்ள போதும் என் கடன் கட்சிப் பணி செய்து கிடப்பதே என்பது போல் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications