கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் - கோவை மக்கள் புகழஞ்சலி

கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் காலமானார். இவர் மலிவு விலையில் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் இவைகளை லாப நோக்கமின்றி செயல்படுத்தி வந்தார்.

Google Oneindia Tamil News

கோவை: வலது கை கொடுப்பது இடது கைக்குதெரியக்கூடாது என்பது போல மக்களுக்கு பல நன்மைகளை செய்து எந்த விளம்பரமும் இன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறார் கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம். இவரது மறைவுக்கு கோவை மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் அதே நேரத்தில் அவரது கொடைத்தன்மை பற்றியும் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் சத்தமில்லாமல் செய்த சாதனை, கொடைத்தன்மை பற்றி கோவைவாசிகள் வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். 100 ரூபாய் தானம் கொடுத்தாலே தன்னை விளம்பரம் செய்பவர்கள் மத்தியில் பல கோடி ரூபாயை மக்களுக்கு செலவு செய்து விட்டு சத்தமில்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறார் சுப்ரமணியம். அவரது கொடைத்தன்மையை பார்க்கலாம்.

Kaliyuga Karnan Shanthi Gears Subramaniam - Coimbatore Peoples Praise

கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்பிட சென்றால் அங்கு பிரமாண்டமான சுத்தமான வளாகம். ராணுவக் கட்டுப்பாடு. பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்தியது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்க வேண்டும். ஒரு நபருக்கு ரூபாய் 20 மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பார்சல் கிடையாது.

பலரது பசி தீர்த்த மாமனிதர் கோவை 'சாந்தி கியர்ஸ்’ சுப்ரமணியம் காலமானார் பலரது பசி தீர்த்த மாமனிதர் கோவை 'சாந்தி கியர்ஸ்’ சுப்ரமணியம் காலமானார்

அருமையான சாப்பாடு. அங்கு வேலை செய்பவர்களிடம் இயந்திரம் தோற்றுப் போகும். அவ்வளவு வேகம். ஒரு நாளுக்கு மதிய வேளையில் 3000 நபர்களுக்கு சாப்பாடு தயார் செய்து விநியோகிப்பதாக தெரியவந்தது. அதற்கு மேல் கண்டிப்பாக கிடையாது. இதனை நிறுவியவர் பெயர் உயர்திரு பி.சுப்பிரமணியம் அவர்கள். சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவரது மனைவியின் பெயர் திருமதி சாந்தி. தனது மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இதனை அவர் நடத்தி வருகிறார்.

Kaliyuga Karnan Shanthi Gears Subramaniam - Coimbatore Peoples Praise

தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்கள் அளவிற்கு எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூ.20க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாய் ஆகாது. இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதும் கிடையாது.

ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது. உணவில் மட்டுமல்லாமல், கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள்.

இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு. இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் இவர் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை.

சாந்தி கியர்ஸ் கேண்டீனில் பல்வேறு வகையான சிற்றுண்டிகளும் விற்கப்படுகின்றன. மைதாமாவில் எந்தவிதமான பதார்த்தங்களும் செய்வதில்லை.
காலை 4.30 மணி முதல் 200க்கும் மேற்பட்டோர் நடைபெயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிறகு 6 மணி முதல் கம்பங்கூல், சூப் அருகம்புல், கீரை, மனத்தக்காளி மற்றும் மற்றும் ஜூஸ் வகைகள் மாதுளை, முருங்கை, கேரட் ஜூஸ் அனைத்தும் 5 ரூபாய்க்கு ஒரு டம்ளர் என்று விற்பனை செய்கிறார்கள்.

களி, சுண்டல், முளைகட்டிய பயிர்களும் விற்கிறார்கள். அனைத்தும் சுத்தமாகவும், அளவில் அதிகமாகவும், விலை குறைவாகவும் கொடுக்கிறார்கள். முக்கியமாக ஒரே நேரத்தில் குறைந்தது 200 குழந்தைகள் விளையாடும் அளவிற்கு விளையாட்டுக் கருவிகளும், பெரிய விளையாட்டுத்திடலும் உள்ளது.

மேலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 5 மழலையர் பள்ளிகள் இலவசமாக நடத்திக்கொண்டிருக்கிறார். இங்கு பயிலும்
அனைத்து குழந்தைகளுக்கும் காலையில் சிறப்பான சிற்றுண்டியும், இடைவேளையில் பாலும்-சுண்டலும், மதியம் மிக உயர்தரமான மதிய உணவும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இங்கிருக்கும் பார்மசியில் குறைந்தது நூறு பேராவது வேலை செய்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய பார்மசி என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மருந்துகளுக்கு 20 முதல் 25 சதவிகிதம் வரை சிறப்புத் தள்ளுபடியும் கொடுக்கிறார்கள்.

மருந்து வாங்க வருபவர்கள் டோக்கனை பெற்றுக்கொண்டு வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்தால், டோக்கன் நம்பர் எதிர்புறம் இருக்கும் டிவி ஸ்கிரீனில் ஸ்கோரலாக ஓடுகிறது. மருந்தினைப் பெற்றுக்கொள்ள 10 கவுன்டர்கள் உள்ளன. முதியோர்களுக்கு சிறப்பு தனி கவுன்டரும் உள்ளன.

கோவையில் எரிவாயு மூலம் எரியூட்டும் மையத்தை முதன்முதலில் ஏற்படுத்தியுள்ளார். எரியூட்டும் மையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரீசர் பாக்ஸ், அமரர் ஊர்தியும் இலவசமே. எரியூட்டும் மையத்திற்கான கட்டணம் ரூ.1000 மட்டுமே.

பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்தன. ஆனால், அவர் எந்த ஊடகத்தையும் சந்திக்கவுமில்லை. பேட்டி கொடுக்கவுமில்லை. எங்குமே அவர்கள் புகைப்படம் இருக்காது. இன்டர்நெட்டில் தேடினால் கூட அவரது புகைப்படம் கிடைக்காது.

ஒரு அரசு தன் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை சத்தமே இல்லாமல் சுத்தமாக செய்து வந்த சுப்பிரமணியன் அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை. முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறது சுப்பிரமணியத்தின் குடும்பம். நல்ல மனம் வாழ்க. இவர்களைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ள http://shanthisocialservices.org. கலியுக கர்ணன் ஆக வாழ்ந்து மறைந்த அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.

English summary
Kaliyuga Karnan Shanthi Gears Subramanian has lived and died without any publicity doing many benefits to the people as giving the right hand should not be visible to the left hand. The people of Coimbatore are paying tearful tributes to his demise while at the same time paying tribute to his generosity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X