விவசாயியை தாக்கி நாடகமாடிய ஒட்டர்பாளையம் விஏஒ, உதவியாளர் கைது - ஜாமீனில் விடுவிப்பு
அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விவசாயி கோபால்சாமியை தாக்கிய விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விவசாயி கோபால்சாமியை தாக்கி விட்டு காலில் விழுந்து நாடகமாடிய விவகாரத்தில் விஏஒ மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில் கலைச்செல்வி என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே ஊரை சேர்ந்த முத்துசாமி என்பவர் தண்டல்காரர் ஆக பணியாற்றி வருகிறார்.

கடந்த 7ஆம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் கோபால்சாமி என்பவர் காலில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி என்பவர் விழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஊடகங்களிலும் இது தொடர்பாக செய்தி வெளியாகவே பரபரப்பு பற்றிக்கொண்டது.
இந்த வீடியோ காட்சிகள் பற்றி நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரான் உத்தரவிட்டார். ஆனால் முத்துசாமிதான் விவசாயி கோபால்சாமியை தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
முதலில் நடந்த விசாரணையில் கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கியத்தற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், அதே வேளையில் விவசாயி கோபால்சாமி காலில் , கிராம உதவியாளர் முத்துச்சாமி விழுந்தற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விவசாயி கோபால்சாமி மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக விஏஒ கலைச்செல்வி புகாரில் ஒரு வழக்கும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கிராம உதவியாளர் முத்துச்சாமி கொடுத்த புகாரின் கீழ் ஒரு வழக்கும் என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கோபால்சாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதே நேரத்தில் விவசாயியான கோபால்சாமி தனது நிலப்பிரச்சனை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் பேசி கொண்டிருந்தபோது அலுவலக உதவியாளர் முத்துசாமிதான் திடீரென கோபால்சாமியை கன்னத்தில் பலமாக அறைந்து கீழே தள்ளியதாகவும், முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கோபால்சாமி கூறவே இல்லை என அவரது தரப்பில் பதில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நடந்த விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்தன. ஒட்டர்பாளையத்தில் விவசாயி கோபால்சாமி தனக்கு சொந்தமான நிலத்தின் ஆவணம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகம் சென்ற போது, விஏஒ கலைச்செல்விக்கும் கோபால்சாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கினார். பின்னர் சிறிது நேரத்தில் கோபால்சாமியின் காலில் விழுந்து முத்துசாமி மன்னிப்பு கேட்டார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து, காட்சிகளை எடிட் செய்து தனித்தனியாக வெளியிட்டார். முதலில் விவசாயி கோபால் சுவாமியின் காலில் கிராம உதவியாளர் முத்துச்சாமி விழும் காட்சிகள் மட்டும் வெளியானது. சில தினங்கள் கழித்து வி.ஏ.ஓ அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமி அடித்து கீழே தள்ளும் வீடியோ காட்சிகள் வெளியானது.
விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர். காலில் விழுந்து நாடகமாடிய முத்துச்சாமி, அதற்கு உடந்தையாக இருந்த விஏஒ கலைச்செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்னூர் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், உண்மைத் தகவலை மறைத்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் விவசாயி கோபால்சாமி கொடுத்த புகாரின் பேரில் கிராம உதவியாளர் முத்துச்சாமி மீதும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மீதும் ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் அன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுவித்தனர். இதே போல ஒட்டர்பாளையத்தில் நடந்த சம்பவங்களை செல்போனில் பதிவு செய்து, அவற்றை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி பதட்டத்தை ஏற்படுத்திய நபர் மீதும் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் அன்னூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த வழக்குகளை திரும்ப பெறும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications