2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
கோவை: ஆவணி மாதம் தேய்பிறை பிரதோஷ நாளில் பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன்கிழமை நன்னாளில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம் என முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சார்பில், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நேற்று நடைபெற்றது.
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, பாஜக மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சியினர் 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பின் திருச்சியில் நடந்த கழக முதல் மாநாட்டில், தலைவர் கலைஞர் ஐம்பெரும் முழக்கங்களை முன்வைத்தார். அவை இன்றும் எனது நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது. அண்ணா வழியிலே அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் அந்த ஐம்பெரும் தத்துவம். இதில்தான், திமுகவின் கொள்கை அனைத்தும் அடங்கியுள்ளது.

ஐந்து முழக்கங்கள்
இதன் தொடர்ச்சியாக, 2018 மார்ச் 24ஆம் தேதி ஈரோட்டில் நடந்த மாநாட்டில், நான் 5 முழக்கங்களை முன்வைத்தேன். கலைஞரின் கட்டளையை காப்போம், தமிழரை வளர்த்து தமிழை போற்றுவோம். அதிகார வர்க்கத்தை அடித்து நொறுக்குவோம், மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம், வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம் என்பது இந்த ஐந்து முழக்கம். ஏற்கனவே, கலைஞர் கூறியது 5 முழக்கம், நான் கூறிய ஐந்து முழக்கம் என 10 முழக்கத்தில்தான் நம் இயக்கத்தின் மொத்த கொள்கையும் அடங்கியுள்ளது.

70 ஆண்டுகள் வளர்ச்சி
இது தமிழக வளர்ச்சிக்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் உகந்த கொள்கையாக உள்ளது. . நாம் அடையாத புகழும் இல்லை, நாம் படாத அவமானமும் இல்லை. நாம் செய்யாத சாதனையும் இல்லை, அடையாத வேதனையும் இல்லை. இவ்வளவுக்கு பிறகும் இந்த இயக்கம் 70 ஆண்டுகளை கடந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒரே காரணம், நமது கொள்கைதான். அந்த கொள்கையை காப்பாற்ற நமது உயிரையும் தர தயாராக இருக்கிறோம்.

திமுக ஆட்சியில் சாதனைகள்
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களை என்னால் பட்டியல்போட்டு சொல்ல முடியும். தினந்தோறும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இந்த அளவுக்கு புதிய திட்டங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என என்னிடமே பலர் சொல்கிறார்கள். நாங்கள், சொல்லி செய்கிறவர்கள் அல்ல, சொல்லாமலும் செய்கிறவர்கள். செய்வதைத்தான் சொல்வோம், சொல்வதைத்தான் செய்வோம்' என்றார் கலைஞர். தற்போது, நாங்கள் சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என நிரூபித்து காட்டி வருகிறோம்.

அண்ணா மீது சத்தியம்
கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது மாநிலம் முழுவதும் சேர்த்து மொத்தமாக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். மாவட்டம் வாரியாக தனியாக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். இதில், தற்போது 60 முதல் 70 சதவீதம் வரை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ளவற்றையும் உறுதியாக நிறைவேற்றுவோம். அண்ணா மீது சத்தியமாக கூறுகிறேன், விடுபட்டவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

அழைப்பு
தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருவதை நீங்கள் கண்கூடாக காண்கிறீர்கள். ஆனாலும், எதிர்கட்சியினர் நம் மீது அவதூறு பரப்புகிறார்கள், பழி சுமத்துகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உண்மையில் எனக்கு நேரமும் இல்லை. இங்கு வந்து, இணைந்துள்ள 55 ஆயிரம் பேரும் பல கட்சிகளில் இருந்து வந்துள்ளீர்கள். கிலிப்பிடித்த நெஞ்சினாய் போ...போ... என சொல்லிவிட்டு, நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். அதனால்தான், உங்களை ஒளி படைத்த கண்ணினாய் வா... என அழைக்கிறேன். நீங்கள் வரவேண்டிய இடத்துக்கு சரியான நேரத்தில் வந்துள்ளீர்கள்.

2024 லோக்சபா தேர்தல்
மிக விரைவில் லோக்சபா பொதுத்தேர்தல் வர உள்ளது. அந்த தேர்தல் பணிக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கழகத்தின் கொள்கை, லட்சியம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருக்கவேண்டும். ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்துள்ளது என்பது, கழக வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வோம். மாபெரும் வெற்றிபெறுவோம் என்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

பொன்னான புதன்கிழமை
நேற்றைய தினம் பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன்கிழமை தேய்பிறை பிரதோஷம் நாள். சிறப்பான இந்த நாளில் லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து பணியை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த லோக்சபா தேர்தலிலும் சொல்லியடித்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா மு.க.ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications