'குரங்கு அம்மை' மறைக்க வேண்டிய அவசியமே இல்லை.. இப்போ இங்கேயே பரிசோதிக்கலாம்.. அமைச்சர் மா.சு பேட்டி!
கோவை : குரங்கு அம்மை பாதிப்பு இருந்தால் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை குரங்கம்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் புனேவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது சென்னையிலேயே ஆய்வகம் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தொடங்கப்பட்டது. அப்போது தான் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆய்வுக்கூட்டம் மற்றும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கருணாநிதியால்
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 2008-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தொடங்கப்பட்டது. அப்போது தான் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் இந்தியாவிற்கு வழிகாட்டி அமைப்பாக இருந்தது. கொரோனாவால் இந்தியா முழுவதும் இந்த பணி தொய்வடைந்தாலும், தமிழக முதல்வர் உறுப்பு மாற்று சிகிச்சைகளை வேகப்படுத்த வேண்டும். கொடையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் இன்று வரை 13 கொடையாளர்கள் 50 உறுப்புகளை தானம் செய்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் ஜூலை 2022 வரை உறுப்பு கொடையாளர்கள் 114 பேர். 588 பேருக்கு உறுப்பு மாற்று பல வகைகளில் உதவியாக இருந்துள்ளது. முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 14 மாதத்தில் மட்டும் 588 பேர் பயன்பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையும், ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சையும் செய்து 6 பேர் பலனடைந்துள்ளனர். தமிழகம் உறுப்பு தானத்தில் முன்னிலையில் இருந்தாலும் தேவைகள் அதிக அளவில் உள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு
80 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கேரளா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறார்கள். கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பாதிப்புகள் இருந்தால் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாதிப்பு வராது எனவும் சொல்ல முடியாது. குரங்கு அம்மை பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் நம்மிடமே உள்ளது. இதுவரை குரங்கு அம்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் புனேவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது சென்னையிலேயே ஆய்வகம் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

பூஸ்டர் தடுப்பூசி
தமிழகத்தில் மூன்றரைக் கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் நிலை உள்ளது. இதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். தற்போது வரை பூஸ்டர் தடுப்பூசியினை 37 லட்சத்து 33 ஆயிரத்து 957 பேர் செலுத்தி கொண்டனர். இது 9.63 சதவீதம். 33-வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையை தொடர்ந்து நாளை முதல் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
Recommended Video

காலி பணியிடங்கள்
தமிழகத்தில் 4,308 காலி பணியிடங்களை நிரப்ப தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில் 200 வகையிலான பணிகள் உள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவத்தில் இதுவரை 82 லட்சத்து 43 ஆயிரத்து 875 பேர் பயனடைந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு 34 கோடியே 60 லட்சம் செலவில் கூடுதல் உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூடுதல் உபகரணங்களுக்கு 36 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications