பவருக்கு வந்த செங்கோட்டையன்.. கொங்கு மண்டலத்தில் ஆட்டத்தை மாற்றும் தவெக
கோவை: தவெக நீண்ட இழுபறிக்கு பிறகு ஆட்சியமைத்துவிட்டது. இந்த தேர்தலில் கொங்கு அரசியல் மிகப்பெரியளவுக்கு கவனம் ஈர்த்தது. திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் அங்கு வெற்றி பெற போராடினார்கள். ஆனால் கொங்கு மண்டலத்தில் தவெக அதிக தொகுதிகளை வெற்றி பெற்றது. செங்கோட்டையன் அமைச்சராக பதவியேற்றுள்ளார். தவெகவின் கொங்கு மண்டல முகமாக அவர் இருக்க போகிறார். இந்நிலையில் அந்தப் பகுதியில் அதிருப்தியில் உள்ள திமுக, அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தேர்தலுக்கு பிறகு என்று இரண்டாக மாறலாம். தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றனர். ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜய் நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன் இணைந்து ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

செங்கோட்டையன் பவர்
தவெக வெற்றிக்கு செங்கோட்டையனும் ஒரு காரணமாக இருந்தார். எம்ஜிஆர் காலத்து சீனியர், அதிமுக முன்னாள் அமைச்சர் என்று அதிமுகவின் கொங்கு மண்டல தளபதியாக
இருந்த செங்கோட்டையன் கடந்தாண்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு கொங்கு மண்டலத்தில் தவெகவை பலப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்தது. திமுகவும் அங்கு வெற்றி பெற காய் நகர்த்தி வந்தது.
அதிமுக மற்றும் திமுகவில் அதிருப்தியில் உள்ள சீனியர்களை தவெகவில் இணைக்கும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டார். கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தனக்கு நெருக்கமாக இருந்த பல்வேறு மாற்று கட்சி நிர்வாகிகளுடைய வீடுகளுக்கு அவர் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். தவெக புது கட்சி என்பதால் அவர்களை நம்பி கட்சியில் இணைய தயக்கம் காட்டினார்கள். பலர் செங்கோட்டையனிடம் நேரடியாக தவெகவை கிண்டல் செய்துள்ளனர்.
கட்சி மாற்றம்
மேலும், செங்கோட்டையனே தவறான முடிவு எடுத்துவிட்டார் என்றும் சிலர் கூறியுள்ளனர். இதனால் அப்போது அவர் எடுத்த முயற்சிகள் கைக்கூடவில்லை. ஆனால் செங்கோட்டையன் மீது விஜய் மிகுந்த மரியாதை மற்றும் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். தேர்தலில் கொங்கு மண்டலத்திற்கான தவெக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு செங்கோட்டையன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு திமுக, அதிமுகவை விட தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது.
நேற்று செங்கோட்டையன் அமைச்சராக பதவியேற்கும்போது விஜய் எழுந்து நின்று உற்சாகப்படுத்தினார். தவெக ஆட்சி இருக்கும் அந்தக் கட்சியின் கொங்கு மண்டல முகமாக செங்கோட்டையன் இருக்க போகிறார். கொங்கு மண்டலத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் ஓரம் கட்டப்பட்ட அதிருப்தி நிர்வாகிகள் தவெகவில் இணைய தயாராகி வருகிறார்களாம். அடுத்தாண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பிறகு 2029 நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது.
அடுத்தடுத்து தேர்தல்
இப்போது தவெகவில் இணைந்தால் அடுத்து தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் எல்லாம் செங்கோட்டையனை சந்தித்து தூது விட தொடங்கியுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள், ஓரம் கட்டப்பட்டவர்கள், சிட்டிங் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பலரும் செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் அங்கு பலர் தவெகவில் இணைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications