மகன், மைத்துனர், மருமகன்.. அதிமுகவை இயக்கும் எடப்பாடியின் குடும்பம்.. அடித்து சொல்லும் செங்கோட்டையன்
கோவை: எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர் மற்றும் மருமகன் ஆகியோரின் செயல்பாடுகள் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருந்து வருவதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். 53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தன்னை யாராலும் இயக்க முடியாது என்று கூறிய செங்கோட்டையன், அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என்று ட்விஸ்ட் வைத்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுகவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் தனித்து இயங்கி வந்த நிலையில், டிடிவி தினகரன் அமமுக என்ற அரசியல் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். தற்போது இவர்களுடன் செங்கோட்டையனும் இணைந்துள்ளார்.

ஏற்கனவே அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பலரும் தொடர்ச்சியாக திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். தற்போது செங்கோட்டையன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு பிரச்சனைகளை கொடுக்க தொடங்கியுள்ளார். திமுகவை குடும்ப கட்சி என்று எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுகவை இபிஎஸ் குடும்பம் இயக்குவதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது அதிமுகவின் ஆணி வேரில் கைவைத்திருப்பதை போன்றதாக பார்க்கப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், தேர்தல் ஆணையத்திற்கு 258 பக்கங்களில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக சொல்ல முடியாது. அதெபோல் அதிமுக குடும்ப கட்சியாக இயங்கி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
என்னை பாஜக இயக்கவில்லை. 53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். என்னை தனிப்பட்ட முறையைல் யாரும் இயக்க முடியாது. என்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர் மற்றும் மருமகன் தொகுதிகளுக்குள் வருவதும், எங்கு எங்கு செயல்படுகிறார்கள், யாரையெல்லாம் எப்படி இயக்குகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்.
அதனைத்தான் நானும் சொன்னேன். அவர்களின் செயல்பாடுகள் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும். அதிமுகவில் இருந்து பலரும் திமுகவுக்கு செல்வதால், அதிமுக கரைந்து கொண்டே வருகிறதா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். அதிமுகவில் இருந்து என்னுடன் யார் பேசுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினால், அவர்களுக்கும் ஆபத்து என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications