ஆசையாக பூங்காவில் சறுக்கு மரம் விளையாடிய குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. கோவையில் சோகம்!
கோவை: கோவையில் சிறுவர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி அருகே சின்னவேடம்பட்டியில் துடியலூர் சாலையில் விமானப் படைக்குச் சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது. இங்கு 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விமானப்படையில் பணிபுரிபவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா ஒன்று உள்ளது. அதில் ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த குடியிருப்பில் குடியிருக்கும் வெவ்வேறு நபர்களின் 4 மற்றும் 8 வயதுள்ள இரு குழந்தைகள் இருவர் நேற்று மாலை 6 மணி அளவில் அங்குள்ள சிறுவர் பூங்காவில் விளையாடச் சென்றுள்ளனர். மேலும் சில சிறார்களும் அங்கு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது சறுக்கு விளையாட்டு விளையாடும் பகுதிக்குச் சென்ற குழந்தைகள் இருவரும், சறுக்கு விளையாட முயன்றுள்ளனர். அப்போது இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்சார தாக்குதலுக்கு உண்டான இரு குழந்தைகளும் மயங்கிய விழுந்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தைகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பூங்கா வளாகத்தில் உள்ள மின் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கிருந்த உபகரணத்தில் மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அங்கிருந்த மின்சார வயர்கள் சேதப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications