கோவையில் அதிகரிக்கும் கொரோனா.. ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள்.. முழு விவரம்!
கோவை: கோவையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இந்த மாணவிகளுக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.

மாணவிகளுக்கு கொரோனா
இந்த கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் 4 பேருக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு மற்ற மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது. கேரளாவில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கேரள மாணவிகள் எப்படி வந்தனர்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

17-ம் தேதி முதல்
இந்த நிலையில் கோவையில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: கோவை மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 82 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 17 ம் தேதி முதல் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

ஞாயிற்றுகிழமை கட்டுப்பாடுகள்
கோவையில் மால்கள் திரையங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஞாயிற்றுகிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.செப்.,20 ம் தேதி முதல் அனைத்து மால்கள் நகைகடைகள், துணிகடைகள் உள்ளிட்ட இதர கடை ஊழியர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். உணவகங்கள் பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்ச்சல்களுக்கு மட்டும் அனுமதி.

உழவர் சந்தைகள்
உழவர் சந்தைகள் 50 சதவீத கடைகளுடன் சுழற்சி முறையில்இயங்க அனுமதிக்கப்படும். பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்படும். சந்தைகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் கலந்து கொள்ளாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications