கோவையில் துணை ஜனாதிபதி நிகழ்ச்சியில் என்ன நடந்தது.. கொதித்த பாஜக.. ஸ்கூட்டரில் வந்த 2 பேர் யார்?
கோவை: துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நேற்று கோவைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார். அவரது வருகைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் போலீசாரால் அமைக்கப்பட்ட பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி 2 பேர் ஸ்கூட்டரில் புகுந்தனர். இதை கண்டு கொதித்து போன பாஜகவினர் சாலை மறியலால் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இந்நிலையில் ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர் யார் என்பது தெரியவந்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன், கொங்கு மண்டலத்தில் பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஒரு காலத்தில் கோவையில் எம்பியாகவும் இருந்துள்ளார். அண்மையில் சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு முதல் முறையாக நேற்று காலையில் விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் கொடிசியாவில் தொழில்துறையினர் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் கோவை ரெட்பீல்டு பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தார்.

இதையடுத்து அவர் மாலை 4 மணிக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். இதற்காக கோவை மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்காக அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு வளையம் போல், இரும்புத்தடுப்புகள் மற்றும் கயிறு கட்டி வைத்திருந்ததுடன், போலீசாரும் அங்கு காவலுக்கு இருந்தனர்.
இந்த நிலையில் பிற்பகல் 2.20 மணிக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் அருகே 5 முக்கு சந்திப்பு பகுதியில் இருந்து ஒருவழிப் பாதையான மணிக்கூண்டை நோக்கி 2 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் சிக்காமல் வேகமாக தப்பிச் சென்றார்கள். அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், போலீசார் பிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வாகனத்தை விரட்டி சென்றதாக புகார் எழுந்தது..
இந்நிலையில் குடியரசு துணை தலைவர் ராதாகிருஷ்ணனுக்காக போடப்பட்ட பாதுகாப்பு வளையத்தை மீறி, இரண்டு பேர் குடிபோதையில் 2 ஸ்கூட்டரில் உள்ளே புகுந்த சம்பவம் குறித்த தகவல் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பரவியது. இதனால் கோபம் அடைந்த பாஜக நிர்வாகிகள், போலீசார் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்றுக்கூறி திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி ஸ்கூட்டரில் உள்ளே புகுந்து தப்பிச் சென்ற 2 பேர் யார்? என்பது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கோவை ஆசாத் நகரை சேர்ந்த 24 வயதாகும் ஆசிக், 25 வயதாகும் அனிஷ் ரகுமான் என்பது தெரியவந்தது. அவர்கள் வாகனத்தை குடித்துவிட்டு ஓட்டி வந்ததும் பேலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் ஸ்கூட்டரை ஓட்டிய ஆசிக் , மது போதையில் இருந்ததால், தன்னை போலீஸ் தன்னை பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் அங்கு நின்றிருந்த சில வாகனங்கள் மீது மோதிவிட்டு தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் எச்சரிக்கையை மீறி, அதிவேகமாகவும், அலட்சியமாகவும், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றதாக ஆசிக்கை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications