அன்னபூர்ணா பிரச்சனை.. கொங்கு அரசியலில் அடித்தாடும் திமுக, சைலன்ட் அதிமுக
கோவை: கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசிய விவகாரமும், அதன் பின்னர் அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தைக் கண்டித்து கொந்தளித்து வரும் நிலையில், அதிமுகவினர் மிகவும் சைலன்டாகவே இருப்பது சர்ச்சைக்குள்ளாக்கி உள்ளது.
கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து எழுப்பி கேள்விகள் தொடர்பான வீடியோ, அதேசமயம் அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ என தொடர்ந்து வைரலாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பேசு பொருளாக இருந்த இந்த பிரச்னை, தற்போது கொங்கு கள அரசியலில் தாக்கத்தை ஏற்படத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து, லண்டனில் இருந்த அண்ணாமலையே மன்னிப்பு கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், கொங்கு அழகு தமிழில் கோரிக்கையைப் பேசினார். ஆனால், பாஜகவினர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த நாள் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தனர். அதேபோல, சூலூரில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தொடர்பாக இளைஞர் கேட்டதற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் அதிகமான பாதிப்பு ஜி.எஸ்.டி.யினால் தான். யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தர்பார் ஆட்சி தான் மத்தியில் நடக்கிறது. பிஸ்கட் 18%, தங்கத்திற்கு 3% விதித்தபோதே இது யாருக்கான ஆட்சி என தெரிந்து கொள்ளலாம். அன்னபூர்ணா உரிமையாளரின் வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா?. அது தனிமனித சட்ட விதிமீறல். அந்த வீடியோ காட்சி கற்காலத்திற்கு எடுத்துச் சென்றதுபோல் இருந்தது.
அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுகிறது. அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானம் படுத்தியதற்குச் சமம். ஜி.எஸ்.டி.யால், 30% சிறு குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. பெண்கள் சமூக நீதி பற்றி பேச தகுதி உள்ள கட்சி திமுக. மதத்தால், ஜாதியால் பிரித்தவர்கள் தற்போது ஆண், பெண் பற்றி பேசுகிறார்கள். குறைதீர் கூட்டம் என்ற பெயரில் அவர்களின் குட்டை அவர்களே வெளிப்படுத்தி உள்ளனர்.
தேர்தலின் போது நாங்கள் எதிர்க்கட்சி பற்றி பேசாமல் செய்த சாதனைகள் பற்றி பேசினோம். வெறுப்பரசியல் பேசக்கூடாது என்று முதல்வரின் ஆணைக்கினங்க செயல்பட்டோம். அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்பட்டதற்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு திமுக துணை நிற்கும். வீடியோ வெளியிட்டதற்குதான் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். அன்னபூர்ணா உரிமையாளர் மிட்டப்பட்டதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை என்றார்.
அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம் பூதாகரமாகி, காங்கிரஸைச் சேர்ந்த கரூர் எம்.பி. ஜோதிமணி, கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மத்தியில் ராகுல் காந்தி என அனைத்துக் கட்சியினரும் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். தங்களின் 20 ஆண்டு கால முயற்சியில் கோவையில் பாஜகவுக்கு படிப்படியாக முன்னேற்றம் கிடைத்த நிலையில், இந்த சம்பவம் பாஜகவை 20 ஆண்டு பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மறுபக்கம் நடப்பதெல்லாம் அதிமுகவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது என்ற கருத்தும் வேகமாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வரும் நிலையில், பெயரளவுக்கு அதிமுக ஜெயகுமார் மட்டும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கோவை மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியோ, எஸ்.பி.வேலுமணியோ இச்சம்பவம் தொடர்பாக குரல் எழுப்பாமல் சைலன்டாகவே இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications