மாட்டு கொட்டகைக்கு வரும் நபர்கள்.. சூலூர் ரம்யா அரிவாளால் வெட்டி கொலை.. போலீஸில் சரணடைந்த கொலையாளி
கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் ரம்யா என்ற இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் கொலையாளி சரணடைந்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த பீடம்பள்ளி கள்ளித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது தந்தை பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டுப் பிரிந்து வந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில், ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையை பாப்பம்பட்டியைச் சேர்ந்த ரம்யா என்ற இளம்பெண்ணுக்கு வாடகை விட்டுள்ளார்.

இளம்பெண் ரம்யாவும் அந்த மாட்டுக் கொட்டகையில் நாய்களை வளர்த்து வந்துள்ளார். கடந்த 45 நாட்களாக ரம்யா அந்த மாட்டுக் கொட்டகையிலேயே தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ரம்யாவைப் பார்ப்பதற்காக அவ்வப்போது ஆட்டோவில் சிலர் வந்து சென்றுள்ளனர். இதனை ராஜேந்திரன் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் அடுத்தடுத்து ஆட்டோவில் நபர்கள் வருவது ராஜேந்திரனுக்கு பிடிக்கவில்லை.
இதையடுத்து, ரம்யாவிடம் கொட்டகையை காலி செய்யுமாறு ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல ரம்யாவைப் பார்ப்பதற்காக சிலர் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளனர். அப்போது, ராஜேந்திரன் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்துள்ளார்.
இதனால், ராஜேந்திரனுக்கும், ரம்யா தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டுக்குள் வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து ரம்யாவின் கழுத்தில் வெட்டி படுகொலை செய்தார். பின்னர், கொலை செய்த அரிவாளுடன் சூலூர் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார்.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரம்யாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டு கொட்டகை தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications