இலங்கை கிரிக்கெட் அணி தடை பின்னணியில் 'இந்தியாவின் ஷா'.. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகீர்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்ததன் பின்னணியில் 'இந்தியாவின் ஷா' இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை மிக மோசமாக விளையாடி அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது. இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த மோசமான ஆட்டம் இலங்கையில் பெரும் அரசியல் சுனாமியையே உருவாக்கிவிட்டிருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது சரமாரியான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுவிட்டது. இது தொடரபாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
"கிரிக்கெட் திருடர்கள் ஒன்று சேர்ந்து நமது நாட்டில் கிரிக்கெட்டை தடை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வாடகை செலுத்தும் சினமன் ஹோட்டலில் உள்ள ஒரு அலுவலகத்தில் கள்ள கூட்டாளி கும்பல் ஒன்று கூடி எப்படியேனும் "இந்தியாவில் ஷா"வுடன் பேசி 72 மணி நேரத்திற்குள் நமது கிரிக்கெட் அணிக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட ஆலோசிக்கப்பட்டுள்ளது; இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகம் என்ற போர்வையில் இவர்கள் திருடுகின்றனர் என பேசியிருந்தார். (நன்றி: வீரகேசரி நாளிதழ்).
இதேபோல இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பேசுகையில், "கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எனவே இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது" என குற்றம்சாட்டி இருந்தார். (நன்றி: வீரகேசரி நாளிதழ்).
இந்த பேச்சுகள் ஒருபக்கம் இருக்க, இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் மிக மிக பாதுப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியில் அரசு தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடை விதிக்கப்பட்டுவிட்டது. இலங்கை அணியைப் போலவே பாகிஸ்தான் அணியும் உள்நாட்டு அரசியல் குழப்பத்தில் சிக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications