அதிமுக முன்னாள் அமைச்சர் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல்.. மருத்துவமனையில் ராமச்சந்திரன்.. பின்னணி என்ன?
கடலூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், முன் ஜாமீன் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக எம்.சி.சம்பத் கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முன்னாள் உதவியாளரின் குடும்பத்தினரை தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எம்.சி.சம்பத்தின் முன்னாள் உதவியாளரின் மாமனார் ராமச்சந்திரன் அளித்த புகாரில், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 14 பேர் மீது 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், அ.தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது உறவினர் ராமச்சந்திரன் என்பவரின் மருமகன் குமார். எம்.சி.சம்பத் அமைச்சராக இருந்தபோது அவரது உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் குமார். அப்போது எம்.சி.சம்பத் - குமார் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தாக்குதல்?
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் ராமச்சந்திரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. எம்.சி.சம்பத் தூண்டுதலின் பேரில், அவரது சகோதரர் தங்கமணி, தனது ஆட்களுடன் சென்று குமாரின் மாமனார் ராமச்சந்திரன் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது எம்.சி.சம்பத் ஆதரவாளர்கள் ராமச்சந்திரனையும், மேலும் இரண்டு பேரையும் தாக்கியதாக அவர்கள் கூறி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே ராமச்சந்திரன் தங்களைத் தாக்கியதாக எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
இதனிடையே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அவரது சகோதரர் உட்பட 14 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

முன் ஜாமீன் கோரி மனு
இந்நிலையில், தன் மீதான வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக எம்.சி.சம்பத் இன்று கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தனது மனுவில் கூறி உள்ளார். இது கடலூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications