முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக் கொலை: கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
முந்திரி தொழிற்சாலை ஊழியர் மர்ம மரணம் தொடர்பாக கடலூர் திமுக எம்.பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர்: முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்.பி ரமேஷ் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிரமத்தில் திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் 19ஆம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கோவிந்தராஜின் மகனுக்கு தொலைபேசி மூலமாக, கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ரமேஷின் உதவியாளர் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் கோவிந்ததாஜின் உடலை பார்த்துள்ளனர். அப்போது அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடலை வாங்க மறுப்பு
தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மனு அளித்ததோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு
அதில், கடந்த 19ஆம் தேதி வேலைக்குச் சென்ற எனது தந்தை வீடு திரும்பவில்லை. அவர் விஷம் குடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடலில் ரத்தக் காயங்கள் மற்றும் அடித்துதுன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே, எனது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவரது மரணம் குறித்து காடாம்புலியூர் போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. எனவே, எனது தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

சிபிசிஐடி தீவிரம்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சென்னை நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்த உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.
கோவிந்தராசு மர்ம மரண வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் பண்ருட்டி மற்றும் பணிக்கன்குப்பத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

தொழிலாளர்கள் வாக்குமூலம்
காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், காவலர் பாஸ்கர், கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கோவிந்தராஜ் அடித்து துன்புறத்தப்பட்டதாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து, கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது.

6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு
இதற்கிடையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை சிபிசிஐடி பெற்றது. அதில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோவிந்தராசுவின் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திமுக எம்.பி தலைமறைவு
இதில், நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எம்.பி ரமேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications